இந்தியா மீது மீண்டும் வரி.. எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா! காத்திருக்கும் சவால்.. காரணம் என்ன?
உக்ரைனில் போர் குறித்து விவாதிக்க, ஆகஸ்ட் 15, வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் அலாஸ்காவில் சந்திக்கவிருக்கின்றனர். உக்ரைனில் போர்நிறுத்தம் செய்யவில்லை என்றால், கடுமையான பொருளாதாரத் தடைகளை ரஷ்யா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா காலக்கெடு விதித்தது. டிரம்பின் உத்தரவின் பேரில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் இரு தரப்பினரும் எந்தவொரு முடிவுக்கும் வரவில்லை.
இந்நிலையில், அலாஸ்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையேயான பேச்சுவார்த்தையின் போது, விஷயங்கள் சரியாக நடக்கவில்லை என்றால் இந்தியா மீதான இரண்டாம் நிலை வரிகள் அதிகரிக்கக்கூடும் என்று அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.
கடந்த வாரம், டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது மொத்தம் 50 சதவீத வரிகளை விதித்து இருந்தார். தற்போது பேசிய ஸ்காட் பெசென்ட், அதிபர் புதின் மீது எல்லோரும் விரக்தியடைந்துள்ளனர் என்று நான் நினைக்கிறேன். அவர் இன்னும் நிறைவான முறையில் பேச்சுவார்த்தைக்கு வருவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். அவர் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கலாம் என்று தெரிகிறது. ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்காக இந்தியர்கள் மீது இரண்டாம் நிலை வரிகளை விதிக்கிறோம்.
விஷயங்கள் சரியாக நடக்கவில்லை என்றால், தடைகள் அல்லது இரண்டாம் நிலை வரிகள் அதிகரிக்கக்கூடும் என்று நினைக்கிறன் என்று ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறினார். மேலும், இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தைகளில் கொஞ்சம் பிடிவாதமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.