ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ் எக்ஸ் தளம்
இந்தியா

மகாராஷ்டிரா | முதல்வரின் விழாக்களைப் புறக்கணிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. முற்றும் அதிகாரப் போட்டி?

மகாராஷ்டிராவில், முதல்வர் ஃபட்னாவிஸ் கலந்துகொண்ட அரசு விழாக்களில் துணை முதல்வர் ஏக்நாத் கலந்துகொள்ளாதது கூட்டணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

மகாராஷ்டிராவில் அபார வெற்றி பெற்று மீண்டும் மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைத்தது. இதில் பாஜகவுடன் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸும் உள்ளன. முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியில் உள்ளனர்.

இந்த நிலையில், ஆளும் பாஜக-சிவசேனா-என்சிபி கூட்டணிக்குள் விரிசல் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, சிவசேனா எல்ஏக்களுக்கு 'ஒய்' பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது காரணமாகக் கூறப்பட்டது. அதாவது, 2022-ஆம் ஆண்டு சிவசேனாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டே வெளியேறியபோது அவரை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்கப்பட்டது. தற்போது அந்த பாதுகாப்பு திடீரென திரும்பப் பெறப்பட்டுள்ளது.

ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ்

சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 20 பேருக்கு வழங்கப்பட்ட ’ஒய்’ பிளஸ் பாதுகாப்பை குறைத்து, ஒரு காவலரை மட்டும் பாதுகாப்புக்கு நியமித்திருக்கிறது மாநில அரசு . சிவசேனா முன்னாள் எம்.பி.க்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதேபோல் பாஜக, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கும் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்புதான் அதிக அளவில் குறைக்கப்பட்டு இருப்பதாக ஷிண்டே தரப்பினர் குற்றஞ்சாட்டி இருக்கின்றனர்.

தேர்தலுக்கு பிறகு முதல்வர் பதவியில் இருந்து விலக மறுத்து வந்த ஏக்நாத் ஷிண்டே, பா.ஜ.க டெல்லி தலைமை தலையிட்ட பிறகுதான் பதவியை விட்டுக்கொடுத்தார். அப்போதிருந்தே, அவருக்கும் ஃபட்னாவிஸுக்கும் இடையேயான அதிகாரப்போட்டி கவனம் பெறத் தொடங்கியது. அதன் பிறகும், முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூட்டிய கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார் ஏக்நாத் ஷிண்டே.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சிவசேனா அமைச்சர் உதய் சாமந்த் தலைமையில் தொழில் துறையின் ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார்.

தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே

உடனே ஏக்நாத் ஷிண்டேயும் தனது பங்குக்கு தொழில் துறை அதிகாரிகளை அழைத்து அத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அதுமட்டுமல்ல… ஏற்கெனவே ’முதல்வர் நிவாரண நிதி என்ற ஒன்று இருக்கும்போது புதிதாக ’துணை முதல்வர் மருத்துவ நிதி’ ஒன்றை ஏக்நாத் ஷிண்டே தொடங்கினார். இந்த புது பிரிவு முதல்வர் நிவாரண நிதிக்கு போட்டியாக அமைக்கப்பட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

அடுத்து, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திலிருந்து ஏக்நாத் ஷிண்டே நீக்கப்பட்டதும் பேசுபொருளானது. மேலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அதிதி தட்கரே மற்றும் பாஜகவின் கிரிஷ் மகாஜன் ஆகியோர் முறையே நாசிக் மற்றும் ராய்காட் பாதுகாவலர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இப்படி, ஃபட்னாவிஸ் - ஷிண்டே இடையிலான அதிகாரப் போட்டி நாளுக்கு நாள் கவனம் பெறுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், தற்போது முதல்வர் ஃபட்னாவிஸ் கலந்துகொண்ட அரசு விழாக்களில் துணை முதல்வர் ஏக்நாத் கலந்துகொள்ளாதது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தானே மாவட்டத்தின் பத்லாபூரில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை திறப்பு விழா, வரலாற்றுச் சிறப்புமிக்க ஆக்ரா கோட்டையில் மராட்டிய மன்னரின் பிறந்தநாள் விழா மற்றும் அம்பேகான் புத்ருக்கில் உள்ள சிவஸ்ருஷ்டி தீம் பார்க்கின் இரண்டாம்கட்ட திறப்பு விழா ஆகியவற்றில் ஷிண்டே கலந்துகொள்ளவில்லை.

தேவேந்திர பட்னாவிஸ் - ஏக்நாத் ஷிண்டே - அஜித் பவார்

இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கலந்து கொண்டார். இதனால், அக்கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக மகாராஷ்டிரா அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். முன்னதாக, ஃபட்னாவிஸ் தலைமையில் நடைபெற்ற 2027 நாசிக் கும்பமேளாவின் மறுஆய்வுக் கூட்டத்தையும் ஷிண்டே புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.