FCRA சட்டம் 1976இல் வெளிநாட்டு நன்கொடைகளை கட்டுப்படுத்த உருவானது. இப்போது மத்திய அரசு தேசிய பாதுகாப்பு, நக்சல், அரசுக்கு எதிரான போராட்ட நிதி போன்ற காரணங்களை முன்வைத்து திருத்த மசோதா கொண்டு வந்துள்ளது. ஆனால் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் இது சிறுபான்மையினருக்கு, குறிப்பாக கிறிஸ்துவத் தொண்டு நிறுவனங்களுக்கு எதிரான திட்டமிட்ட நடவடிக்கை என குற்றம்சாட்டுகின்றன.
செய்தியாளர் - விக்னேஷ்
FCRA (Foreign Contribution Regulation Amendment) சட்டம் முதலில் 1976ஆம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தில் இயற்றப்பட்டது. வெளிநாட்டுச் சக்திகள் இந்திய தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை என்ற பெயரில் நிதியை அனுப்பி, உள்நாட்டின் விவகாரங்களில் தலையிடுகின்றன என்று சொல்லி இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் உள்ள தனி நபர்களும் சங்கங்களும் பெறும் வெளிநாட்டு நன்கொடைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் அவை இந்திய இறையாண்மைக்கு இணங்க செயல்படுவதை உறுதி செய்வதே இந்தச் சட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.
தற்போது இந்த சட்டத்தில் திருத்தம் செய்து கடந்த மாதம் 25ம் தேதி மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த பயன்படுத்தப்பட்டாலோ அல்லது நக்ஸல் தீவிரவாதத்துக்கு உதவும் விதமாக பயன்படுத்தப்பட்டாலோ அதை தடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது. ஆதலால் தேசப் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, அதற்கு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டியதிருப்பதாலேயே இந்த சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிராக இருப்பதாக காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஏற்கனவே இஸ்லாமியர்களுக்கு வக்ஃபு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அவர்களின் சொத்துக்களை பிடுங்கிய பாரதிய ஜனதா கட்சி, இப்பொழுது கிறிஸ்துவத் தொண்டு நிறுவனங்களின் சொத்துக்களை அடித்துப் பிடுங்குவதற்கு இந்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இப்பொழுது இந்தச் சட்டத்தின் மூலம் கிறிஸ்துவர்களின் தனிப்பட்ட சொத்துக்களை எடுக்கும் அளவிற்குச் செல்லும் என்ற குற்றச்சாட்டை திமுக முன்வைத்துள்ளது.
2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இதை ஒரு திட்டமிட்ட செயலாகச் செய்து வருவதாக திமுக விமர்சிக்கிறது. 2020-இல் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மூலம் 20,000-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன; ஒரே நேரத்தில் 2,500 கிறிஸ்துவத் தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் புதுப்பிக்கப்படாமல் முடக்கப்பட்டன. இதை எதிர்த்து வழக்கு போட்டாலும் அவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காமல் தடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறது.
இந்த மசோதாவின்படி, பறிக்கப்படும் சொத்துக்களை ஏலம் விடலாம் என்றும், அப்படி ஏலம் விடப்பட்டால் அந்தச் சொத்தைப் பற்றி எதுவுமே கேட்க முடியாது என்ற அச்சத்தையும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வைத்திருக்கின்றன.