தமிழ்நாட்டில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு சீட்..? காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக வெடித்த சர்ச்சை!
கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு தொகுதியில் கேரளாவைச் சேர்ந்த T.T. பிரவீன் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது கட்சிக்குள் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நீண்டகாலம் உழைத்த உள்ளூர் நிர்வாகிகளை புறக்கணித்து வெளிமாநில வேட்பாளருக்கு சீட் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செய்தியாளர் - K. S. Manu
கன்னியாகுமரி மாவட்ட அரசியல் களத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியிருக்கிறது விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி. அதற்கு காரணம், காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள வேட்பாளருக்கு எதிராக அக்கட்சியினரே போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதுதான். திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் பெரும் போராட்டத்திற்கு பிறகு தொகுதி பங்கீட்டில் 28 தொகுதிகளை பெற்றது. ஆனால், அதைவிட பெரும் போராட்டத்திற்கு மத்தியில் தனது வேட்பாளர்களை கடைசி கட்சியாக அறிவித்தது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 தொகுதிகளில், திமுக 2 தொகுதிகளிலும், சிபிஎம் 1 தொகுதிலும் போட்டியிடுகின்றன. மீதமுள்ள குளச்சல் தொகுதியில் தாரகை கத்பர்ட், கிள்ளியூர் தொகுதியில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ மற்றும் விளவங்கோடு தொகுதியில் புதுமுகமான T.T. பிரவீன் என 3 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
இந்தசூழலில் தான் விளவங்கோடு தொகுதியில் அறிவிக்கப்பட்டிருக்கும் டி.டி. பிரவீனுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.
விளவங்கோடு தொகுதியில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் உள்ளூர் நிர்வாகிகளைப் புறக்கணித்துவிட்டு, கேரளாவைச் சேர்ந்த T.T. பிரவீன் என்பவரை வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. மேலிடத்தின் இந்த முடிவிற்கு எதிராக உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் வீதியில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்ததோடு, "பணம் கொடுத்து சீட் வாங்கிய வெளிமாநில வேட்பாளர் எங்களுக்கு வேண்டாம்" என முழக்கமிட்டு வருகின்றனர். வேட்பாளரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று போர் கொடி ஏந்தியும் வருகின்றனர்.
தமிழ்நாடு - கேரள மாநில எல்லையில் இருக்கும் விளவங்கோடு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரவீனின் செயல்பாடுகள் பெரும்பாலும் கேரள மாநிலத்திலேயே இருப்பதால் அவர் மீது இப்படியான விமர்சனம் முன்வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதேபோன்று மேலூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. உட்கட்சி மோதலின் வெளிப்பாடகவே அதன் வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

