காதல் எந்த உயிரினங்களையும் விட்டுவைப்பதில்லை. இளையோர் முதல் பெரியோர் வரை காதலிக்கின்றனர். அப்படியான காதல் பலருக்கு கைகூடுகிறது. சிலருக்கு கைகூடுவதே இல்லை. ஆயினும், இன்றைய காலத்தில் பலருக்கும், அதாவது திருமணத்திற்குப் பிறகும் தொடரவே செய்கிறது. இதனால் இருதரப்பிலும் பிரச்னைகள் ஏற்பட்டு உறவுகள் பிரிவதுடன் அவர்களுடைய எதிர்காலமும் வீணாய்ப் போகிறது. இன்னும் சில இடங்களில், காதலுக்காக கட்டிய துணைகளையே கொலை செய்யும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. மறுபுறம், அதிலும் சில நல்ல உள்ளங்கள் திருமணத்திற்குப் பிறகும் காதலுக்காக அவ்வுறவுகளைச் சேர்த்து வைத்து வருகின்றன.
அதாவது, 1981ஆம் ஆண்டு திரைக்கதை ஜாம்பவான் பாக்யராஜ் இயக்கத்தில் உருவான படம், ‘அந்த ஏழு நாட்கள்’. இந்தப் படத்தைப் பொறுத்தவரை பாக்யராஜ், அம்பிகா இருவரும் காதலித்து இருப்பார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் அம்பிகா, ராஜேஷை திருமணம் செய்துகொள்வார். திருமணத்திற்குப் பிறகும் பாக்யராஜ் நினைவாகவே அம்பிகா இருப்பார். இதனைப் புரிந்து கொண்ட ராஜேஷ், தன்னுடைய மனைவியின் ஆசையை நிறைவேற்ற நினைப்பார். ஆனால், இறுதியில் பாக்யராஜ் அதற்கு இடம்கொடுக்க மாட்டார். ஒருகட்டத்தில் அம்பிகாவும் தயங்கி நிற்பார்.
இந்த நிலையில், இதேபோன்று தன் மனைவி பிரியப்பட்ட காதலரை, அவரோடு சேர்த்து வைத்து அழகு பார்த்திருக்கிறார், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கணவர் ஒருவர். அம்மாநிலத்தின் ஜான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரீட்டா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். ஆனால் ரீட்டா, யஷ்வந்த என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். தவிர, கல்யாணத்திற்குப் பிறகும் அவர் நினைவாகவே இருந்துள்ளார். ஒருகட்டத்தில், ரீட்டா தனது பெற்றோர் வீட்டிற்குத் திரும்பியபோது யஷ்வந்தோடு ஐக்கியமாகி உள்ளார். இந்த விவகாரம் தெரிந்து கணவர் அரவிந்த், ரீட்டாவை அழைக்கச் சென்றுள்ளார். ஆனால், அவர் மறுத்துவிட்டார். இதனால், அரவிந்த் புதிய முடிவெடுத்து, அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க நினைத்தார். அதன்படி, அவர்கள் சம்மத்துடனேயே ஒரு கோயிலில் திருமணம் செய்துவைத்து அந்த ஜோடியைச் சேர்த்துவைத்தார்.
இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலானதும், பயனர்கள் பல்வேறு பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர். பயனர் ஒருவர், “இது ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கை. காவல்துறையினரால் நீல டிரம்மில் அவரைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, அவர் சரியான முடிவை எடுத்துள்ளார்" எனப் பதிவிட்டுள்ளார். இன்னொருவரோ, ”அரவிந்த் திருமணத்தில் பாம்பை விரும்பவில்லை. அவர், தன் குடும்பத்தில் விஷத்தைப் பரப்புவதற்கு முன்பே அவளை ஒழித்துவிட்டார்” எனப் பதிவிட்டுள்ளார். மூன்றாம் நபரோ, மேகாலயாவின் சமீபத்திய தேனிலவு கொலையைச் சுட்டிக்காட்டி, “நல்ல வேளை, அரவிந்த் தன் உயிரைக் காத்துக் கொண்டார்” எனத் தெரிவித்துள்ளார்.