பீகார் | மனைவியை அவரின் காதலருக்கே திருமணம் செய்துவைத்து கணவர்! சிக்கல் என்னன்னா..
பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இவர், இரவு நேர பணிக்குச் செல்லும் சமயத்தில் அவரது மனைவி, தன்னுடைய காதலனைப் பார்க்கச் சென்றுவிடுவதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயம் இவர்களுடைய குடும்பத்தினருக்கு ஒருநாள் தெரிய வந்ததையடுத்து, இருவரையும் கடுமையாக அடித்துள்ளனர். அத்துடன், அவர்கள் இருவரையும் ஊரைவிட்டுச் சென்றுவிடும்படி வலியுறுத்தி உள்ளனர். அப்போது, அங்கு வந்த கணவரிடம் நிலைமையை விளக்கி உள்ளனர்.
உடனே அவர் சற்றும் யோசிக்காமல் அந்த ஜோடியை அருகில் இருந்த சிவன் கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். அடி வாங்கிய காதலர், தன் காதலிக்கு காயங்களுடன் நெற்றியில் திலகமிடும் காட்சிகள்தான் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. திருமணமானவர் என்பதற்காக மனைவிக்கு காதல் வருவதைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என குடும்பத்தாரிடம் அக்கணவர் கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்த திடீர் கல்யாணத்தில் சிக்கல் என்னவெனில், சம்பந்தப்பட்ட அந்த காதலன், ஏற்கெனவே திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தந்தையானவர் என சொல்லப்படுகிறது. பாலிவுட்டில் 1999-ல் வெளியான Hum Dil De Chuke Sanam படத்தில் இதேபோல ஒரு கதைக்களம் இருக்கும். அந்தப் படத்தில் இறுதியில் அந்த மனைவி, தன் கணவனை தேடிதிரும்பி வந்துவிடுவார். அந்த க்ளைமேக்ஸை மாற்ற நினைத்தே, தான் இப்படி செய்தததாக இதில் சம்பந்தப்பட்ட அக்கணவன் கூறியுள்ளார்.