உ.பி. | தனது மனைவியை காதலருக்கு திருமணம் செய்துவைத்த கணவர்! அந்த 7 நாட்களுக்கு புதிய கிளைமாக்ஸ்
உத்தரப்பிரதேச மாநிலம் சாந்த்கபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பப்லு. இவரது மனைவி ராதிகா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராதிகாவுக்கு ஏற்கெனவே தனது கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரைக் காதலித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகும் அந்த உறவு தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவரம் கணவர் பப்லுக்குத் தெரிய வந்து, மனைவியைக் கண்டித்துள்ளார். ஆனால் ராதிகாவோ காதலனை தன்னால் மறக்க முடியவில்லை என அவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் வேறு வழி தெரியாத கணவர் பப்லு, மனைவி ராதிகாவை, அவரது காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்தார். தனது விருப்பத்தை அவர் மனைவி மற்றும் கிராம மக்களிடம் கூறினார். முதலில் இதற்கு எதிர்ப்பு கிளம்பினாலும் பின்னர் அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். காதலர்களும் இதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து, நீதிமன்றத்தில் அவர்களுக்கு திருமணம் செய்துவைத்தார். பின்னர் அங்குள்ள கோயிலில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், உறவினர்கள் முன்பு அவர்கள் இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். திருமணம் முடிந்ததும், பப்லு ராதிகாவிடம் 2 குழந்தைகளையும் தான் வளர்க்க விரும்புவதாக தெரிவித்தார். அவரும் சம்மதம் தெரிவிக்க, குழந்தைகளை பப்லு அழைத்துச் சென்றார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, இதேபோல் ஒரு சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பீகாரிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அந்த7 நாட்கள் - க்ளைமேக்ஸ்
பாக்கியராஜ் இயக்கி நடித்திருந்த திரைப்படம் அந்த 7 நாட்கள். 1981 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ராஜேஷ், அம்பிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கவிதை அரங்கேறும் நேரம் உள்ளிட்ட பாடல்களும் ஹிட் ஆனது. வழக்கம்போல் தன்னுடைய திரைக்கதை யுக்தியால் படத்தை அதகளபடுத்தி இருப்பார் பாக்கியராஜ். இந்தப் படத்தை பொறுத்தவரை பாக்கியராஜ், அம்பிகா இருவரும் காதலித்து இருப்பார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் அம்பிகா, ராஜேஷை திருமணம் செய்து கொள்வார். திருமணத்திற்கு பிறகும் பாக்கியராஜ் நினைவாகவே அம்பிகா இருந்தார். இதனை புரிந்து கொண்ட ராஜேஷ் தன்னுடைய மனைவியின் ஆசையை நிறைவேற்ற நினைப்பார். இசையமைப்பாளராக மாற துடிக்கும் இளைஞராக பாக்கியராஜ் நடித்திருப்பார். டாக்டராக இருக்கும் ராஜேஷ் தன்னுடைய மனைவியான அம்பிகாவுக்கு காதலனை சேர்த்து வைக்க நினைத்து தேடி கண்டுபிடிப்பார். பின்னர் ராஜேஷ் - பாக்கியராஜ் இடையே நடக்கும் காட்சிகள் அவ்வளவு உணர்வுபூர்வமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒரு தயாரிப்பாளர் போல் நடித்து அதற்கு இசையமைக்க வேண்டும் என பாக்கியராஜ் இடம் கேட்டு ஒரு கதையை ராஜேஷ் சொல்வார். ஆனால், போக போகத்தான் பாக்கியராஜ்-க்கு தெரியும் அந்தக் கதையே தன்னுடைய கதை தான் என்று. அதாவது படத்தின் க்ளைமேக்ஸில் தன்னுடைய மனைவியை அவரது காதலனுடன் சேர்த்து வைப்பது போல் ராஜேஷ் சொல்வார். அதாவது மறைமுகமாக சொல்வார்.
ஆனால், எல்லாவற்றையும் புரிந்து கொண்ட பாக்கியராஜ் இந்த க்ளைமேக்ஸ் வேண்டாம் அந்த டாக்டர் உடனே வாழ்வது தான் சரியாக இருக்கும் என்று கூறுவார். அதாவது, ‘என்னோட காதலி உங்களோட மனைவி ஆகலாம்.. ஆனால் உங்களோட மனைவி என்னோட காதலி ஆகாது’ என்று பாக்கியராஜ் பேசி முடிப்பார். இது கொஞ்சம் ஓல்டு க்ளைமேக்ஸ் தான் ஆனால் கோல்டு என்று அழுத்தமாக பதிவு செய்வார்.
இருப்பினும் அந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் ஒரு விவாதத்திற்கு உட்பட்டதே. கலாசாரத்தின் தன்மையை கருதி பாக்கியராஜ் அந்த க்ளைமேக்ஸ் எழுதி இருப்பார். ஆனால், ஒருவேளை பாக்கியராஜ் உடன் அம்பிகா இணைந்து வாழ்ந்திருந்தாலும் அதிலும் தவறேதும் இல்லை. இது சிக்கலான விஷயம் தான். இரண்டு முடிவிலும் அர்த்தம் இருக்கிறது. அப்படியான ஒரு க்ளைமேக்ஸ் தான் தற்போது உத்திரப்பிரதேசத்தில் நிஜத்தில் நிகழ்ந்துள்ளது. இது அரிதான ஒரு நிகழ்வுதான். இருந்தாலும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் நேர்மறையாக புரிந்து கொள்ளும் போது உணர்வுகள் மதிக்கப்படும் போது எடுக்கப்படும் முடிவுகள் அனைத்துமே சிறப்பானவைதான்.