exam paper
exam paper twitter
இந்தியா

'ஜெய் ஸ்ரீராம்’ என எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள்.. மதிப்பெண் அளித்த 2 பேராசிரியர்கள் இடைநீக்கம்!

Prakash J

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்பூர் நகரில் வீர்பகதூர் சிங் பூர்வாஞ்சல் என்ற பல்கலைக்கழகம் உள்ளது. இந்தப் பல்கலையின் முதலாம் ஆண்டு மாணவர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' மற்றும் கிரிக்கெட் வீரர்களின் சில பெயர்களை விடைத்தாளில் எழுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதுகுறித்து அப்பல்கலையின் முன்னாள் மாணவரான திவ்யன்சு சிங் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், பார்மசி முதல் ஆண்டு படிப்பிற்கான சில விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய கோரினார்.

இதில், சில முறைகேடுகள் நடந்திருந்தது தெரியவந்துள்ளது. அதில், 'பார்மசி ஒரு தொழில்' என்ற கட்டுரையின் நடுவில் ’ஜெய் ஸ்ரீ ராம்’ என எழுதப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதே கட்டுரையில், ஹர்திக் பாண்டியா, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய வீரர்களின் பெயர்களும் எழுதப்பட்டு உள்ளன.

அதன்படி, பேராசிரியர்கள் இருவர், மாணவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களை தேர்வில் தேர்ச்சிபெற வைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக திவ்யன்சு சிங், உத்தரப்பிரதேச ஆளுநர், பிரதமர், முதல்வர், பல்கலை துணைவேந்தர் என அனைவருக்கும் கடிதம் அனுப்பியிருந்தார். இதுபற்றி நடவடிக்கை எடுக்கும்படி உடனடியாக கவர்னர் அலுவலகம் துணைவேந்தருக்கு உத்தரவிட்டிருந்தது.

இதையும் படிக்க: இஸ்ரேல் | இறந்துபோன கர்ப்பிணியிடமிருந்து காப்பாற்றப்பட்ட சிசு.. 5 நாட்களுக்குப் பிறகு உயிரிழப்பு!

மேலும், இந்தச் சம்பவம் பற்றி கண்காணிப்புக் குழு ஒன்று வெளியில் இருந்து மதிப்பீடு செய்தபோது, பூஜ்ஜிய மதிப்பெண் பெற்ற மாணவர்கள்கூட, 50 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்தது. தவிர, தேர்வு நடைமுறையில் முறைகேடுகள் நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இரண்டு பேராசிரியர்கள் பல்கலையின் சில அதிகாரிகளின் துணையுடன் இதைச் செய்திருப்பதாக தெரியவந்தது. அந்த வகையில் அவர்களின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வினய் வர்மா மற்றும் ஆஷிஷ் குப்தா ஆகிய 2 பேராசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து துணைவேந்தர் வந்தனா சிங், “மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, தனது அறிக்கையில் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. அதன்பேரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பேராசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தபிறகு, அவர்கள்மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையும் படிக்க: ஒரு வருடத்துக்கு முன்பு காணாமல் போன தாய்லாந்து மாடல் அழகி.. பக்ரைனில் சடலமாக மீட்பு!