கர்நாடகா: சுற்றிலும் ’ஜெய் ஸ்ரீராம்’ என ஒலித்த கோஷம்! ‘அல்லாஹு அக்பர்’ என முழங்கிய முஸ்லிம் பெண்!

கர்நாடகாவில் இந்து அமைப்பினர் எழுப்பிய ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்திற்கு எதிராக, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ‘அல்லாஹு அக்பர்’ எனக் கூறியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
கர்நாடக பெண்
கர்நாடக பெண்ட்விட்டர்

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம்

உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோயிலில் இன்று (ஜன.22), பிராண பிரதிஷ்டை சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதைக் கொண்டாடும் வகையில், அயோத்தி மாவட்டத்தில் உள்ள மகளிர் மருத்துவமனையில் பர்சானா என்ற கர்ப்பிணிக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்து - முஸ்லிம் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் அந்தக் குழந்தைக்கு, ’ராம் ரஹீம்’ எனப் பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதேநேரத்தில் இதுபோன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் சிலர், தேவாலயங்களில் காவிக் கொடி ஏற்றி சர்ச்சையில் ஈடுபட்ட சம்பவங்களும் அரங்கேறின. அந்த வகையில், கர்நாடாகவில் இந்து அமைப்பினர் சிலர், ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்துடன் சாலையில் வலம் வந்தபோது, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், ’அல்லாஹ் அக்பர்’ என ஓங்கிக் குரல் கொடுத்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: “அவர்கள் கேட்கல” - ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்துடன் தேவாலயத்தில் காவிக்கொடி ஏற்றிய கும்பல்! போதகர் வேதனை!

’அல்லாஹு அக்பர்’ என கர்நாடகாவில் கோஷம் எழுப்பிய முஸ்லிம்பெண்

கர்நாடகாவின் ஷிமோகாவில் ஷிவப்பா நாயகா சர்க்கிள் பகுதியில் இந்து அமைப்பினர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்துடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் குழந்தையுடன் சென்ற இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாகனத்தை நிறுத்தி படம்பிடித்தார். அப்போது போலீசார் அங்கு வந்து டூவீலரை அங்கிருந்து நகர்த்துமாறு கேட்டுக்கொண்டனர். இதனால் அந்தப் பெண்ணுக்கும் போலீசாருக்கும் இடையே சில நிமிடம் வாக்குவாதம் நடைபெற்றது. இதையடுத்து அங்கு குவிந்த இந்து அமைப்பினர், ’ஜெய் ஶ்ரீராம்’ என்ற கோஷத்தைத் தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருந்தனர்.

மும்பை ரயில் நிலையத்திலும் அரங்கேறிய சம்பவம்

அப்போது அந்தப் பெண், திடீரென ’அல்லாஹ் அக்பர்’ எனப் பதில் முழக்கம் எழுப்பினார். பின்னர், குழந்தையுடன் அந்தப் பெண் அங்கிருந்து சென்றார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இதேபோன்ற ஒரு சம்பவம், மும்பை ரயில் நிலையத்திலும் நடைபெற்றது. அந்த ரயில் நிலையத்திற்குள் காவிக் கொடியுடன் சென்ற சில இந்து அமைப்பினர், அங்கு நின்றிருந்தவர்களுக்கு எதிராக, ’ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷம் எழுப்பினர். இதற்கு அவர்கள், ‘அல்லாஹு அக்பர்’ எனக் கோஷம் எழுப்பினர். பின்னர், ஒருவழியாக இந்து அமைப்பினர் கலைந்துசென்றனர். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: 5 மனைவிகளுக்கு ஒரே நேரத்தில் வளைகாப்பு; இருவருக்கு ஒரேநாளில் பிரசவம்-வைரலான 22 வயது அமெரிக்க இளைஞர்!

2022இல் முழங்கிய முஸ்லிம் மாணவி

முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அப்போது, உடுப்பியில் உள்ள ஒரு அரசுக் கல்லூரியில், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். ஹிஜாப் அணிந்து வர அந்த கல்லூரி முதல்வர் தடை விதித்தார். அந்தத் தடையை மீறி முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிராக, இந்து மாணவர்கள் காவித் துண்டு அணிந்து வந்து போராட்டம் நடத்தினர்.

மாண்டியாவில் நடந்த இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் சிலர், கல்லூரிக்கு ஹிஜாப்புடன் வந்த பி.காம் 2ஆம் ஆண்டு முஸ்லிம் மாணவி முஸ்கான் கானைச் சுற்றிவளைத்து ’ஜெய் ஸ்ரீராம்’ என கோஷங்களை எழுப்பினர். பதிலுக்கு அந்த மாணவி, ‘அல்லாஹு அக்பர்’ என முழக்கமிட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவால் அந்த மாணவி நாடு முழுவதும் பேசுபொருளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்திய விமானத்திற்கு அனுமதி மறுத்த மாலத்தீவு அதிபர்.. உயிருக்குப் போராடிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com