உத்தர பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் தற்போதே அங்கு தேர்தல் ஜுரம் தொடங்கிவிட்டது. வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி என அறிவித்துள்ளார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும், கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதல் பணம் 24 மணி நேரத்தில் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மறுபுறம் உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தே தங்கள் முதல்வர் வேட்பாளர் எனக் கூறியுள்ளார் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீன். உத்தர பிரதேச தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும் அதைத் தராவிட்டால் தனித்துப்போட்டியிடவும் தயார் என்றும் கூறியுள்ளார் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள வரும் மத்திய அமைச்சருமான ராமதாஸ் அதவாலே.
பாஜகவுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைக்கும் என்று வெளியான தகவல்களை வதந்தி என மறுத்துள்ளார் அக்கட்சியின் மாயாவதி. 2014ஆம் ஆண்டிலிருந்து சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல்களில் தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாக வெற்றி வாகை சூடிய பாஜக கடந்த 2024 மக்களவை தேர்தலில் கடும் சரிவை கண்டுள்ளது.
75 இடங்களில் போட்டியிட்ட பாஜக 33இல் மட்டுமே வென்றது. சமாஜ்வாதி 62 இடங்களில் நின்று 37 இடங்களில் வென்றது. பாஜக இம்முறை மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற இயலாமல் போனதற்கு உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்ட சரிவே முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் பாஜக மற்றும் சமாஜ்வாதி இடையே அனல் பறக்கும் போட்டியாக அமையும் என கருதப்படுகிறது