பாஜவுக்கு மாறிய ஆம் ஆத்மி ராகவ் சதா.. Unfollow செய்த Gen Z தலைமுறை!
மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி கடந்த பிப்ரவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். இதை ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால், இந்தக் கொண்டாட்டத்தில் அவரது கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பியான ராகவ் சதா பங்கேற்கவில்லை. இதனால், ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவராக இருந்த ராகவ் சதாவுக்கும், கட்சித் தலைமைக்கும் (அரவிந்த் கெஜ்ரிவால்) இடையில் சில காலமாகவே பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. தொடர்ச்சியாக ஆம் ஆத்மி மாநிலங்களவை துணைத்தலைவர் பதவியில் இருந்தும் ராகவ் சதா நீக்கப்பட்டார்.
இந்தநிலையில் தான், ராகவ் சதா, அசோக் மிட்டல் மற்றும் சந்தீப் பதக் ஆகியோர் டெல்லியில் பாஜக கட்சித் தலைவர் நிதின் நபின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். இந்நிலையில், சமூக ஊடக கண்காணிப்புத் தரவுகளின்படி, இளைஞர்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கைப் பெற்றிருந்த ராஜ்யசபா உறுப்பினர் ராகவ் சதா பாஜகவில் இணைந்த 24 மணி நேரத்திற்குள் கிட்டத்தட்ட 10 லட்சம் பின்தொடர்பவர்களை இன்ஸ்டாகிராமில் இழந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த திடீர் சரிவுக்கு, முன்பு அவரது வலுவான ஆன்லைன் பின்தொடர்பாளர் (ஃபாலோ) செய்தவர்களில் பலர் ஜென் Z தலைமுறையினர் என்றும் அவர்கள் ஆம் ஆத்மி கட்சியால் ஈர்க்கப்பட்டு ஃபாலோ செய்ததாகவும் கூறப்படுகிறது . தற்போது ராகவ் சதா பாஜகவில் இணைந்ததால் அதனை எதிர்த்து அவரை பின்தொடர்ந்தவர்கள் unfollow செய்ததாகவும் கூறப்படுகிறது .

