தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி.. பெரும் சிக்கலில் மத்திய பாஜக அரசு.. அடுத்து என்ன நடக்கும்?
தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய பாஜக அரசு மக்களவையில் கொண்டு வந்தபோது, 3ல் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்பட்ட நிலையில் 278 ஆதரவு, 211 எதிர்ப்பு வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் மசோதா தோல்வியடைந்தது. தென்மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் மத்தியில், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இன்றி இந்த முயற்சி முன்னேற முடியாது என்பது தெளிவானது.
கடந்த தசாப்தங்களில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய மக்கள் தொகை கட்டுப்பாடு திட்டங்களை தென்மாநிலங்கள் சிறப்பாக செயல்படுத்தியதால் அந்த மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டது.
இவ்வாறு மக்கள் தொகை வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டதால் தென்மாநிலங்கள் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்தன. ஆனால், வடக்கு மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்த தவறியதால் அங்கு மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. இது அந்த மாநிலங்களின் வளர்ச்சியையும் கடுமையாக பாதித்தது.
இந்த சூழலில் தொகுதி மறுவரையறை செய்யவுள்ளதாக மத்திய பாஜக அரசு அறிவித்தது தென்மாநிலங்களில் பதட்டத்தை அதிகரித்தது. தற்போதைய மக்கள் தொகையை வைத்து தொகுதிகள் சீரமைக்கப்பட்டால் அது வட மாநிலங்களுக்கு சாதகமாகவும், தென்மாநிலங்களுக்கு எதிராகவும் இருக்கும் என்று இங்கு எதிர்ப்பு எழுந்தது.
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி.. அடுத்து என்ன நடக்கும்..?
இந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா, அரசியலமைப்பு 131வது திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் மசோதா ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்தது.
அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் நிறைவேறவேண்டும் என்றால் மொத்தமுள்ள 3ல் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும் என்ற சூழலில், தொகுதி மறுவரையறை மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 278 வாக்குகளும், எதிராக 211 வாக்குகளும் பதிவாகிய நிலையில், 3ல் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற தவறியதால் இந்த மசோதா தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. தொகுதி மறுவரையறை மசோதாவோடு இணைத்து மகளிர் இடஒதுக்கீடு மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதா தோல்வியைத் தழுவிய நிலையில், மீதமுள்ள இரண்டு திருத்த மசோதாக்களையும் தாக்கல் செய்ய வேண்டாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் அறிவித்தார்.
இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாமல் இந்த மசோதா நிறைவேறாது என்ற நிலையை எட்டியுள்ளது. இதனால் வரும் காலங்களில் இந்த மசோதாவில் எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் திருத்தங்களை கொண்டுவரவேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

