மகாராஷ்டிர மாநிலத்தில் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் பற்றிய பேச்சுகள் விஸ்வரூபமெடுத்து வருகின்றன. சமீபத்தில், ஔரங்கசீப்பைப் புகழ்ந்து பேசியதற்காக மகாராஷ்டிரா சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ அபு அசீம் ஆஸ்மி கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்தும் இன்னும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. ஒளரங்கசீப் கல்லறையை அகற்ற தானும் விரும்புவதாகவும், அதில் சட்டச் சிக்கல் இருப்பதாகவும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, கல்லறையை அகற்ற வலியுறுத்தியும், அகற்றாவிட்டால் கரசேவை மூலம் அகற்றுவோம் என தெரிவித்து மாநில அரசிடம் மனு அளித்துள்ள பஜ்ரங் தள், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போராட்டம் நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், பாபர் மசூதிக்கு ஏற்பட்ட நிலைமை ஔரங்கசீப் கல்லறைக்கும் ஏற்படும் என இந்த அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்துத்துவா அமைப்பினரின் இத்தகைய கருத்துக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சில அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும், அவர்களுடைய கருத்துக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிரத்தின் ஔரங்கபாத் நகரில் உள்ள ஔரங்கசீப் கல்லறையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, அதைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் காவல்துறையினர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து இது தெலங்கானாவிலும் எதிரொலித்துள்ளது. இதுதொடர்பாக அம்மாநில பாஜக எம்எல்ஏ ராஜா சிங், ”ஒளரங்கசீப் கல்லறையை இடித்துத் தள்ளுவோம்” என மிரட்டல் விடுத்துள்ளார். இந்த நிலையில் ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பதற்கு மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், ”முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் கொடூரமானவர்தான்; மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகனை படுகொலை செய்தவர்தான். ஆனால் மராத்தியர்களின் பேரரசை ஒளரங்கசீப்பால் கைப்பற்ற முடியாமல் போனது. ஒளரங்கசீப்பின் கல்லறை நூற்றாண்டுகளாக இருக்கிறது; அவருடைய தவறான நடவடிக்கைகளை நினைவூட்டக் கூடியதாகவும் இந்த கல்லறையைப் பார்க்கலாம்.
அதேநேரத்தில் ஒளரங்கசீப்பை புகழ்ந்து பேசுவது எல்லாம் தேவையற்றது. அதை அகற்றுவது எந்த நோக்கத்திற்கும் உதவாது. இப்பிரச்னையை மீண்டும் கிளப்ப வேண்டிய அவசியமில்லை” என்றவரிடம், “இந்தப் பிரச்னையை பாஜக தலைவர்கள் எழுப்புவது ஏன்” என்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர், “இந்த சர்ச்சையில் பாஜகவோ அல்லது வேறு எந்த கட்சியோ ஈடுபடவில்லை. ஔரங்கசீப்பை ஒரு சாதுர்யமான நிர்வாகி என்று வர்ணிப்பது அல்லது பாஜக ஆட்சியை அவரது ஆட்சியுடன் ஒப்பிடுவது பொருத்தமற்றது. இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஔரங்கசீப் குல்தாபாத்தில் அடக்கம் செய்யப்பட்டிருப்பதால், அவரது கல்லறை தொந்தரவு செய்யப்படாமல் இருக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.