டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் தனித்தனியாகப் போட்டியிட்டதைத் தொடர்ந்து ’I-N-D-I-A’ கூட்டணி பற்றிய செய்தி விஸ்வரூபமெடுத்து வருகிறது. அந்த வகையில், மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் (பிரிவு) தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவரும் துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவுக்கு விருது வழங்கி கெளரவித்தது பேசுபொருளாகி உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியை எதிர்க்க காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்தன. இதில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸும் அடக்கம். இந்தக் கட்சிகளுடன் காங்கிரஸும் இணைந்து மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் மகா விகாஸ் அகாடியாக கூட்டணி அமைக்கப்பட்டது. இக்கூட்டணியின் மூத்த தலைவராக சரத் பவார் இருந்தார். எனினும், இந்தக் கூட்டணி பெருத்த தோல்வியைச் சந்தித்தது.
ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவை இந்தக் கூட்டணி அதிகம் விமர்சித்த நிலையில், தற்போது அவருக்கே சரத் பவார் விருது வழங்கியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் 98வது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் விழா நடைபெற்றது. இதில், மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு மகாத்ஜி ஷிண்டே ராஷ்ட்ர கௌரவ் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை, தேசியவாத காங்கிரஸ் (பிரிவு) தலைவர் சரத் பவார் அவருக்கு வழங்கி கெளரவித்தார். அப்போது பேசிய சரத் பவார், “தனக்கு ஷிண்டேவுடன் நல்ல உறவு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதற்கு உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர், “பவார் விழாவில் பங்கேற்று ஷிண்டேவுக்கு விருது வழங்குவார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. சிவசேனாவுக்கு துரோகம் இழைத்து கட்சியை உடைத்தவருக்கு பவார் போன்ற மூத்த தலைவரால் எப்படி விருது வழங்க முடிகிறது. இந்த நிகழ்வு, தரகர்களின் அரசியல் கூட்டம். அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்படும் இத்தகைய விருதுகள் வாங்கப்படுகின்றன அல்லது விற்கப்படுகின்றன" எனத் தெரிவித்தார்.
ஆனால், சஞ்சய் ராவத்தின் இந்தக் கருத்துக்குப் பாஜக பதிலடி கொடுத்துள்ளது. எனினும், சரத் பவார் சமீபகாலமாக அரசியல் நகர்வுகள் குறித்த செய்திகளில் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, அவரது கட்சியையே உடைத்த அஜித் பவாரை சமீபத்தில் ஒரு மேடையில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், ஆம் ஆத்மி - காங்கிரஸின் மோதலைத் தொடர்ந்து சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கூட்டணியும் உடையும் என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.