மகாராஷ்டிரா: அமைச்சர் பதவி மறுப்பு.. கட்சிப் பதவியை ராஜினாமா செய்த சிவசேனா எம்.எல்.ஏ.?
மஹாராஷ்டிராவில் அபார வெற்றி பெற்று மீண்டும் மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைத்தது. கடந்த டிசம்பர் 5ஆம் தேதி முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதலவர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியேற்றுக்கொண்டனர். ஆனால் இலாகா மற்றும் அமைச்சர்கள் தொடர்பாக தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
இந்த நிலையில், அமைச்சரவை தொடர்பாக, சமீபத்தில் தேவேந்திர பட்னாவிஸும், ஏக்நாத் ஷிண்டேவும் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவையில் பாஜகவைச் சேர்ந்த 19 பேரும், சிவசேனாவைச் சேர்ந்த 11 பேரும், தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.
இந்த நிலையில், அம்மாநில பந்தாரா - பவானி தொகுதியில் 38,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சிவசேனா எம்.எல்.ஏ நரேந்திர போண்டேகருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாததினால் அவர் அக்கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நரேந்திர போண்டேகர், பந்தாரா - பவானி தொகுதியில், அவர் மூன்று முறை எம்.எல்.ஏவாகத் தேர்வு செய்யப்பட்டவர் என்பது குற்ப்பிடத்தக்கது. அதனடிப்படையில் அவருக்கு அமைச்சர் பதவி தருவதாக ஏக்நாத் ஷிண்டே கூறியதாகவும், ஆனால் அமைச்சரவை விரிவாக்கத்தின்போது அவர் பெயர் விடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. தனது பெயர் இல்லாதது குறித்து போண்டேகர் ஏக்நாத் ஷிண்டேவிடம் கேட்டபோது, உரிய பதில் கிடைக்காததால் போண்டேகர் கட்சிப் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. என்றாலும், அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவில்லை.