- பிரேம்குமார். சீ
பீகாரில் இந்த வருடம் சட்ட மன்றத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்படி இதுவரை 65 லட்சம் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மேலும், இந்த வாக்காளர் திருத்தப்பணிகள் பீகாரைத் தாண்டி இந்தியா முழுவதும் நடைபெறும் போது தமிழ்நாடு அதிகமாக வடமாநிலத்தவர் பணி செய்யும் இடமாக இருப்பதால், வடமாநிலத்தவர்களுக்கு இங்கு வாக்குரிமை அளிக்கும் பட்சத்தில் தேர்தலில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் அரசியல் விமர்சகர்களும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
அதன்படி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருந்த அறிக்கையில்..
‘வாக்காளர் சிறப்புத் திருத்தம்' என்ற பெயரில் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமை பறிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!
இந்தியத் தேர்தல் ஆணையம் ‘வாக்காளர் சிறப்புத் திருத்தம்’ என்ற பெயரில், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அவசர கதியில் இலட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்குவதும், இலட்சக்கணக்கான வாக்காளர்களைப் புதிதாகச் சேர்ப்பதும் மக்களை முட்டாளாக்கி, மக்களாட்சி முறைமையைக் கேலிக்கூத்தாக்கும் கொடுஞ்செயலாகும். பாஜக அரசின் கைப்பாவையாகச் செயல்படும் இந்தியத் தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு வாக்களிப்பவர்களை மட்டும் பட்டியலில் சேர்ப்பதோடு, பாஜகவிற்கு வாக்களிக்காதவர்களை இனங்கண்டு நீக்கும் வகையில் செயல்படுத்தும் ‘வாக்காளர் சிறப்புத் திருத்தமானது’ தேர்தல் நடைமுறையையே வெற்று சடங்காக மாற்றும் எதேச்சதிகாரப்போக்காகும்’ என்று கூறியிருந்தார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிடுள்ள அறிக்கையில்...
பாஜக ஒன்றிய அரசு சமீபத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை கொண்டு வந்த நிலையில், முதற்கட்டமாக இந்த திருத்தம் பீகாரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பீகாரில் வசிக்கும் மக்கள், வாக்காளர் பட்டியல் இடையே உள்ள வேறுபாடுகள் சரிசெய்யப்பட்டு வருகிறது. தற்போது பீகாரில் வாக்காளர் பட்டியலில் உள்ள சுமார் 6.5 இலட்சம் பேர், தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்து விட்டதால், அவர்கள் பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளனர். இந்த சிறப்பு திருத்தம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டால், பீகாரைச் சேர்ந்த 6.5 லட்சம் பேர் மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்துள்ள சுமார் ஒரு கோடி பேர் வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இம்மாநில வாக்காளர்களாக கருதப்படுவர்.
1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் – ”தமிழ்நாடு” ஒரு மாநிலமாக அமைக்கப்பட்டது. தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர்களின் வாழ்வுரிமை ஆகியவற்றை உறுதி செய்வதற்காகவே, மொழிவழி தேசிய இன மாநிலங்கள் உருவாக்கப்படுவதாக மாநிலச் சீரமைப்புச் சட்டத்தின் நோக்கவுரையில் தெளிவுபடுத்தப்பட்டது. ஆனால், அந்த நோக்கத்தைச் சீர்குலைத்து தமிழர் தாயகத்தையே கலப்பின மண்டலமாக மாற்றும் முயற்சியில் திட்டமிட்ட முறையில் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது” என்று கூறியிருந்தார்.
வாக்களர் திருத்தப்பணி பற்றி நடைப்பெற்ற நேர்பட பேசு நிகழ்ச்சியில் ` தமிழக அரசியலில் என்ன விளைவுகளை உண்டாக்கும் வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் ’ என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் அய்யநாதன் முக்கிய கருத்துக்களை முன் வைத்தார். அவர் பேசியிருப்பதாவது;
”தமிழ்நாட்டில் மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்கான நோக்கமே மொழி, பண்பாடு, வாழ்வுரிமை, பொருளாதார உரிமை ஆகியவை காக்கப்பட வேண்டுமென்று தான். ஆனால், வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமைகளை அளிப்பதன் மூலம் அந்த மக்களுக்கு தேவையான அரசு அமையாமல் அவர்களின் நலனுக்கு முரணான அரசு அமையும் நிலை ஏற்படும். மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்கான நோக்கத்தை சீர்குலைப்பதாகவே அமையும்.
மேலும், தமிழகத்தில் தங்கி இருக்கும் பீகாரின் 6.5 லட்சம் பேரும் முழுவதுமாக இங்கு வந்துவிடவில்லை. அவர்கள் வேலைக்காக மட்டுமே வந்திருக்கின்றன. அவர்களின் நிலம் குடும்பம் எல்லாமே அவர்களின் சொந்த ஊரிலேயே உள்ளது. யாரும் இங்கு வாக்குரிமை வேண்டும் என்று கேட்பதில்லை. புலம் பெயர்ந்தவர்களுக்கு இங்குள்ள அரசியல் தன்மை பற்றி என்ன தெரியும். அவர்களுக்கு பாஜக, காங்கிரஸ் பற்றி மட்டும் தான் தெரியும் அவர்களை விலை கொடுத்து வாங்கிவிடலாம் என நினைக்கிறது ஒன்றிய அரசு. ஆனால், அவர்களுக்கு வாக்குரிமையை இங்கு அளிப்பதன் மூலம் தமிழ்நாட்டு அரசியலை சீர்குலைக்க நினைக்கிறார்கள். வடமாநிலத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கான அவசியம் இல்லை” இவ்வாறு அவர் பேசினார்.
நாம் தமிழர் கட்சி-யை சார்ந்த இடும்பாவனம் கார்த்தி பேசியதாவது;-
இந்தியாவின் மிக மூத்த தேசிய இனம் தமிழ் இனம். இந்திய ஒன்றியத்தின் ஒரு மாநிலமாக தமிழ்நாடு இருக்கலாம் ஆனால் தமிழ்நாடு என்பது ஒரு தேசம். தமிழ் தேசிய இனத்தின் தாயகம். இந்த தமிழ் தேசிய இனத்தை கலப்பின தேசமாக மாற்றும் சதி செயலை பாஜக செய்து வருகிறது. வடமாநிலத்தவர்கள் வருவதை நாங்கள் குறை சொல்லவில்லை, ஆனால் வரைமுறையற்ற குடியேற்றம் தமிழ் தாயகத்தை சிதைக்கும் பண்பாட்டை சிதைக்கும். வடநாட்டவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் அரசியல் திசைவழிப்போக்கு மாறிப்போகும். 2014, 2019, 2024 போன்ற மூன்று தேர்தல்களிலும் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை. இந்த நிலையை தகர்க்கவே பாஜக இந்த முயற்ச்சியை எடுத்திருக்கிறது” இவ்வாறு அவர் பேசினார்.