மனிதர்களே செல்ல முடியாத ஆழ்கடல் முதல் தாய்ப்பால் வரையிலும் மைக்ரோபிளாஸ்டிக் கலந்துவிட்டது. உலகம் முழுக்க பெரும் பிரச்சினையாக இருக்கும் இந்த மைக்ரோ பிளாஸ்டிக் மாசுபாட்டில் கிட்டத்தட்ட 50% வாகனங்களின் டயர்கள்தான் காரணம் என்பதை நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை என்கிறது சமீபத்தில் வெளியான ஆய்வு.
கார், பைக் போன்ற நம்முடைய வாகனங்களின் டயர்கள் தேய்மானம் அடைந்தால் உடனே புதிய டயரை வாங்கிக்கொள்கிறோம். ஆனால்,பழைய டயரில் தேய்மானம் அடைந்த துகள்கள் எங்கு செல்கின்றன? அவை என்ன மாதிரியான சூழலில் சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன என்பதை பற்றி நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சுற்றுச்சூழல்மேலாண்மை இதழ் (Journal of Environmental Management ) வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரை பல அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்துள்ளது. வாகனங்கள் சாலையில் செல்லும்போது, அதன் டயர்களில் இருந்து நுண்ணிய மைக்ரோ பிளாஸ்டிக்குகளை உதிர்கின்றன.
சாலைகளில் உதிரும் இந்த டயர் தேய்மானத் துகள்கள், மழைக் காலங்களில் வடிகால்களிலும், கால்வாய்களிலும் அடித்துச்செல்லப்பட்டு ஆறு, குளம், ஏரி,கடல் என அனைத்து நீர்நிலைகளிலும் கலக்கின்றன. இப்படி நீர்நிலைகளில் கலக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகள் மீன்கள், நண்டுகள், சிப்பிகள் போன்ற நீர்வாழ் உயிரினங்களின் உணவுகளிலும் கலந்துவிடுகின்றன.
இதனால் நீர்வாழ் உயிரினங்கள் பாதிப்பதோடு அவற்றை உண்ணும் விலங்குகள், மனிதர்களுக்கும் தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதுகுறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நச்சுத்தன்மைக்கு, டயர்கள் சிதையாமல் இருப்பதற்காகச் சேர்க்கப்படும் 6PPD என்ற வேதிப்பொருளில் இருந்து வரும் ரசாயனம்தான் காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில், 6PPD வேதிப்பொருள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் சிறுநீரிலும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவை மனிதர்களின் கல்லீரல், நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களையும் சேதப்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, டயர்களில் 6PPD-க்கு மாற்றுகளை அடையாளம் காணவேண்டும் என `இன்டர்ஸ்டேட்டெக்னாலஜி அண்ட் ரெகுலேட்டரிகவுன்சில்’ கடந்த 2023ஆம் ஆண்டு அறிவுறுத்தியது. ஆனால், டயர் உற்பத்தியாளர்கள் தரப்போ இதற்கு பொருத்தமான மாற்று இல்லை எனக்கூறுகிறது. இதை இப்படியேவிட்டால், இந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகள் நீர்வாழ், நிலவாழ் உயிரினங்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இயற்கை சமநிலையையே பெரிய அளவில் பாதிக்கும் என எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.