பிகார் சட்டசபை தேர்தல் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிகாரின் இந்தியா கூட்டணிக்குள் புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது. ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ் பிகாரின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆர்ஜேடி போட்டியிடும் எனத் தெரிவித்திருக்கிறார்.
முயஸ்ஃபர்பூர் பகுதி கண்ட்டியில் (Kanti), கடந்த சனிக்கிழமை மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “நாங்கள் மீண்டும் வருவோம். ஒன்றுபட்டு இருங்கள். இந்த முறை 243 இடங்களிலும் தேஜஸ்வி போட்டியிடுவார். கண்ட்டி, முயஸ்ஃபர்பூர், கைகாட் என எதுவாக இருந்தாலும் தேஜஸ்வி அங்கிருந்தும் போட்டியிடுவார்” எனத் தெரிவித்திருப்பது கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்துவதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்கப்படும் அழுத்தமாகவும் தேஜஸ்வியின் இந்த வார்த்தைகள் பார்க்கப்படுகின்றன.
ஏனெனில், பிகாரின் மகாகத்பந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD), காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியவை முக்கியமான கட்சிகளாக உள்ளன. மேலும், ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி, முகேஷ் சஹானியின் விகாஷீல் இன்ஷான் கட்சி போன்ற கட்சிகளும் இருக்கின்றன. இதைத்தாண்டி, கூட்டணிக்கு புதிய வரவுகளான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் பசுபதி பராஸின் லோக் ஜன சக்தி போன்ற கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இருக்கின்றன.
மேலும், அசாதுதீன் ஓவைஸி தலைமையிலான அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாதுல் முஸ்லிம் (AIMIM) கட்சியும் இந்தியா கூட்டணியில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறது. மதச்சார்பற்ற முன்னணியை வலுப்படுத்தவும், வாக்குகள் பிரிவதைத் தவிர்க்கவுமே இத்தகைய முடிவுக்கு வந்ததாக AIMIM இன் பீகார் மாநிலத் தலைவர் அக்தருல் இமான் தெரிவித்திருக்கிறார். கூட்டணி அமையவில்லை என்றால் 100 இடங்களில் தனித்துப்போட்டியிடவும் தயார் என்றும் அக்கட்சி தெரிவித்திருக்கிறது.
இஸ்லாமியர்கள் ஆதிக்கம் கொண்ட சீமாஞ்சல் பிராந்தியத்தில் (பூர்னியா, கட்டிஹார், கிஷன்கஞ்ச், ஆரரியா மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகள்) AIMIM மிகவும் வலுவாக இருக்கிறது. 2020 ஆம் ஆண்டில், சீமாஞ்சலில் இக்கட்சி ஐந்து இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் நான்கு MLAக்கள் பின்னர் RJD க்கு சென்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தியா கூட்டணிக்குள் AIMIM இணைய ஆர்ஜேடி, காங்கிரஸ் போன்ற கட்சிகளில் இருக்கும் முக்கிய தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். AIMIM கூட்டணியில் சேர்ந்தால், அது RJDக்கு வாக்களிக்கும் பாரம்பரிய இஸ்லாமியர்களின் வாக்குசதவீதத்தில், எதிர்கால நோக்கில் பாதிப்பினை ஏற்படுத்துமெனக் கருதுகின்றனர். மகாகத்பந்தன் கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு தொடர்பாக இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் நிலையில், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வியாதவின் கருத்து மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனெனில் காங்கிரஸ் 2020 பிகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 70 இடங்களில் மீண்டும் போட்டியிட விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஆனால், RJD காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்களை மட்டுமே ஒதுக்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. இதையொட்டியே பிகாருக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ண அல்லாவாரு, RJD தொகுதி பங்கீட்டில் இன்னும் நெகிழ்வாக இருக்க வேண்டும் எனும் கருத்தை முன்வைத்திருந்தார்.
இத்தகைய சூழலில்தான், தேஜஸ்வியின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியிருக்கும் ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் மிருதுஞ்சய் திவாரி, தேஜஸ்வியின் கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கமளித்திருக்கிறார். அனைத்து இடங்களிலும் அவரது தலைமையில் போட்டியிடுவோம் என்பதையே தேஜஸ்வியின் வார்த்தைகள் குறிக்கிறது என்றும், INDIA கூட்டணி உறுதியாகவே உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்.
2020 பிகார் சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் மகாகத்பந்தன் என இரண்டு கூட்டணிகளும் தலா 37.9% வாக்குகளைப் பெற்றன. மொத்தம் 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் NDA 125 இடங்களை வென்று, குறைந்த பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. மகாகத்பந்தன் 110 இடங்களை கைப்பற்றியது.
தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD), 75 இடங்களை பெற்று தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய கட்சியாக மாறினாலும் ஆட்சியைப் பிடிக்கமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் சில சிக்கல்கள் நிலவுகிறது. அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி ராம் விலாஸ் கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான், சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவும் தயார் என்று கூறிவருகிறார். இவர் முதல்வர் நிதிஷ் குமாரின் தலைமைக்கு சவால் விடுபவராக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார்.
சமீபத்தில், பிகாரில் சட்டம் ஒழுங்கு பிரச்னை உச்சத்தை தொட்டதை அடுத்து சிகார் பஸ்வான், இந்த அரசை ஆதரிப்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன் எனத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. பிகார் மண்ணின் மைந்தர்களான தேஜஸ்வி யாதவ், சிராக் பாஸ்வான் இருவரும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக வெளிப்படுத்திவரும் கருத்துகள் பெரிய கட்சிகளையும் மூத்த தலைவர்களையும் அமைதியிழக்கச் செய்துள்ளன.