தெலுங்கிலிருந்து அடுத்த ஹிட் சினிமா... வசூலில் மிரட்டும் மிராய்! | Mirai Teja Sajja | Manchu Manoj
தெலுங்கு சினிமாவுக்கு இது கொண்டாட்டமான மாதம். இம்மாத துவக்கத்தில் வெளியான `லிட்டில் ஹார்ட்ஸ்' பெரிய ஹிட்டானது. கடந்த வாரம் வெளியான Kishkindhapuriக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பெரிய எதிர்பார்ப்புகளுக்கு நடுவே வெளியான `மிராய்' படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி இருக்கிறது.
நடிகர் தேஜா சஜ்ஜா நடித்து கடந்த ஆண்டு வெளியான `ஹனு மேன்' 200 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. `மிராய்' படத்திலும் இதிகாச கதையை மையப்படுத்திய சூப்பர் ஹீரோ படம் என அதே ரூட்டை பிடித்திருந்தார்கள். உலகத்துக்கு வரும் ஆபத்தை தடுக்க மிராய் என்ற ஆயுதத்தை கைப்பற்றி, வில்லனை அழிக்க வேண்டும். இதற்குள் மதம் சார்ந்த விஷயங்களை சேர்த்து பலருக்கும் உணர்வுப் பூர்வமாக கனெக்ட் ஆகும் படமாக கொடுத்திருக்கிறார்கள். ராமரின் ஆயுதம், தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான மோதல், வேதம், சக்திவாய்ந்த ஒன்பது நூல்கள் என படத்தில் பல விஷயங்கள் மத நம்பிக்கைகள் சார்ந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே பெருவாரியான மக்கள் படத்தை கொண்டாடுகிறார்கள்.
அதை சார்ந்து படத்தின் வசூலும் பெரிய அளவில் இருக்கிறது. படம் வெளியாகி மூன்று நாட்களில் இந்திய அளவிலான வசூல் 45 கோடி (NET). உலக அளவில் படத்தின் வசூல் 81.2 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படத்திற்கு வரவேற்பு இருப்பதால் இனி வரும் நாட்களிலும் வசூல் அதிக அளவில் இருக்கும் என சொல்லப்படுகிறது.