ஸ்வாதி மாலிவால், அரவிந்த் கெஜ்ரிவால் pt web
இந்தியா

“பட்டியலின சமூகத்தவரை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள்” கெஜ்ரிவாலுக்கு ஸ்வாதி மாலிவால் கடிதம்

டெல்லியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவை எதிர்க்கட்சித் தலைவராக்குமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஸ்வாதி மாலிவால் கடிதம் எழுதியுள்ளார்.

அங்கேஷ்வர்

செய்தியாளர் ராஜீவ்

டெல்லியில் 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த ஆம் ஆத்மி சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தது. மொத்தமுள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அதிலும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் மற்றும் சவுரப் பரத்வாஜ் உள்ளிட்டோரும் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தனர்.

டெல்லி, பாஜக

வெற்றி பெற்ற பாஜகவின் புதிய முதலமைச்சர் வியாழன் அன்று ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பார். இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமுனையில், ஆம் ஆத்மி எதிர்க்கட்சி வரிசையில் அமர இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவராக கோபால் ராய், அதிஷி உள்ளிட்ட 4 தலைவர்களில் யாரேனும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் மாநிலங்களவை எம்பி ஸ்வாதி மாலிவால், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

சுவாதி மாலிவால் எழுதியுள்ள கடிதத்தில், “டெல்லி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தங்கள் உடல்நலம் மற்றும் மன அமைதியின் மீது கவனம் செலுத்துங்கள். 2022-ம் ஆண்டு பஞ்சாப் தேர்தலின் போது, வெற்றி பெற்று பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்குவோம் என்று நீங்கள் வாக்குறுதி அளித்தது நினைவிருக்கலாம், ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

ஸ்வாதி மாலிவால்

தற்போது, டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்கும் நேரம் வந்துள்ள நிலையில், அக்கட்சியின் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவரை டெல்லி எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வை எதிர்க்கட்சித் தலைவராக்குவது வெறும் அரசியல் முடிவாக இருக்காது, ஆனால் அது நமது அடிப்படைக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கான வலுவான நடவடிக்கையாக இருக்கும்.

இந்த முறை உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றி, நீங்கள் பேசுவது மட்டுமல்ல, உண்மையில் சமத்துவம் மற்றும் நீதிக்கான அரசியலையும் செய்கிறீர்கள் என்பதை நிரூபிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். பஞ்சாபிற்கு அளித்த வாக்குறுதி மீறலை மீண்டும் செய்வதைத் தவிர்த்து, இந்த வரலாற்று முடிவை எடுங்கள்” என தெரிவித்துள்ளார்.