பீகார், தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம் எக்ஸ் தளம்
இந்தியா

பீகார் | வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்.. தேர்தல் ஆணையத்தை எச்சரித்த உச்ச நீதிமன்றம்!

சட்டவிரோதம் என கண்டறியப்பட்டால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடைமுறை ரத்து செய்யப்படும் என தேர்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Prakash J

பீகாரில், இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அம்மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்தப் பணி கடந்த ஜூலை 25ஆம் தேதியுடன் நிறைவுற்றது. அதன்படி,பீகாரில் உள்ள 7.9 கோடி வாக்காளர்களில் இறப்பு, இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இரு இடங்களில் பதிவு என மொத்தம் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்திற்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதாடிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், ”தேர்தல் ஆணையம் கேட்கும் ஆதாரங்களால் ஏராளமானோர், வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெறாமல் போகும் நிலை ஏற்படுகிறது” எனத் தெரிவித்தார்.

பீகார்

ஆதார் போன்ற சான்றுகளை அதிகாரிகள் நிராகரிப்பதாகவும் அவர் கூறினார். இதைக் கேட்ட நீதிபதிகள், ”ஆதார் வசிப்பிடத்திற்கான சான்று மட்டுமே என்றும் குடியுரிமைக்கான சான்றாக அதை ஏற்க முடியாது” என்றும் குறிப்பிட்டார். இதன்பின் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் ராகேஷ் துவிவேதி, ”தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சிலகுறைகள் இருப்பதாகவும் செப்டம்பர் 30ஆம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்போது அவை களையப்படும்” என்றும் உறுதியளித்தார். வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘’இந்த விவகாரத்தில் மனுதாரர் கூறுவதுபோல் 5 கோடி வாக்காளர்களை நீக்கினால் நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும், சட்ட விரோதம் கண்டறியப்பட்டால், தேர்தல் நெருங்கும் செப்டம்பர் மாதம் இறுதியாக இருந்தால்கூட ஒட்டுமொத்த நடைமுறையும் ரத்து செய்யப்படும்” என்றும் எச்சரித்தனர்.