நாடு முழுவதும் தெரு நாய் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை, 3 நீதிபதிகள் அமர்வு நிறுத்தி வைத்துள்ளது. இதுகுறித்த செய்தியை இங்கு அறியலாம்.
நாடு முழுவதும் தெரு நாய் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மறுபுறம், தலைநகரில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதும், மக்களை தாக்குவதும், பெரும் பிரச்னையாக உருவெடுத்து வரும் நிலையில், இதுதொடர்பான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு, ’டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி, அவற்றை அதற்கான காப்பகங்கள் அமைத்து 8 வாரங்களுக்குள் அதில் விட்டு பராமரிக்க வேண்டும். டெல்லியில் மொத்தம் 10 லட்சம் தெருநாய்கள் இருக்கும் நிலையில், ஒவ்வொரு காப்பகமும் குறைந்தது 5,000 நாய்கள் இருப்பது போன்று அமைக்க வேண்டும். இதை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும்’ என கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. நாய்க்கடி மற்றும் வெறிநாய்க்கடி வழக்குகள் அதிகரித்து வருவதால், இந்த உத்தரவுகள் அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
அரசாங்க தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் டெல்லியில் 25,000 நாய் கடி வழக்குகள் பதிவாகியுள்ளன, 2025 ஜனவரியில் மட்டும் 3,000 க்கும் மேற்பட்டவை பதிவாகியுள்ளன. இருப்பினும், பல விலங்குகளை தங்குமிடங்களில் வைத்திருப்பது தளவாடச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைச் செயல்களைத் தூண்டும் என்றும் விலங்கு நல ஆர்வலர்கள் கூறினர். எட்டு லட்சம் தெருநாய்களை அடைக்க போதுமான வசதிகள் இல்லை என்றும் வாதிட்டனர்.
மேலும் அவர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இதுகுறித்து கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அதேபோல், இந்த உத்தரவுக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதியால் இந்த வழக்கு விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் அஞ்சாரியா ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை 3 நீதிபதிகள் அமர்வு நிறுத்தி வைத்துள்ளது. பதிலாக, தெருநாய்களைப் பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியுள்ளது. ”பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிக்க அனுமதி இல்லை. தெருநாய்களுக்கு உணவளிக்க பிரத்யேக இடங்கள் உருவாக்கப்படும். தெருக்களில் நாய்களுக்கு உணவளிப்பது கண்டறியப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், நாய்களைத் தத்தெடுப்பதற்கான விண்ணப்பங்களை விலங்கு பிரியர்கள் சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் அனுமதியளித்தது.