’தெருநாய் கடியால் ஒருவர் கூட பாதிக்கப்பட கூடாது..’ - 5 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
நாடு முழுவதும் தெரு நாய் தொல்லை அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் தெரு நாய் தாக்குதல் காரணமாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்ததன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் நீதிபதி ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் அமர்வு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியது.
இவ்வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது, சிறு குழந்தைகள் உட்பட எவரும் தெரு நாய் கடிகளால் பாதிக்கப்படக் கூடாது என்றும், நாய்கள் கடித்து விடுமோ என்ற அச்சம் இல்லாத சூழலில் மக்கள் நடமாடும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் ஒரு இடத்தில் இருந்து பிடிக்கப்படும் தெரு நாய் கருத்தடை செய்யப்பட்ட பிறகு மீண்டும் அதே இடத்தில் விடுவிக்கப்படுவதன் நோக்கம் என்ன? என்பது குறித்து அரசு அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பியதோடு, இந்த மாதிரியான நடவடிக்கைகள் அபத்தமான முடிவு எனவும் சாடினர்.
விலங்குகள் நல ஆர்வலர்களை சாடிய உச்சநீதிமன்றம்..
மேலும் தெரு நாய் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்படுவதனால் ராபிஸ் தாக்கம் குறையாது. அப்படி இருக்கையில் ஏன் மீண்டும் தெரு நாய்களை பிடித்த இடத்திலே விடுவிக்கப்படுகிறது? என மீண்டும் கேள்வி எழுப்பியதோடு, இனி டெல்லியின் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு தெருநாய்களை கூட பார்க்க முடியாத சூழலை உண்டாக்க வேண்டும் என கூறினர். மேலும் தெருநாய்கள் அனைத்தும் பிடிக்கப்பட்டு காப்பகங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும், இந்த உத்தரவை மதிக்க தவறினால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும் அமிகஸ் கியூரியுமான கௌரவ் அகர்வால் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பரிந்துரைகளை கேட்டுக்கொண்ட நீதிபதிகள் 5 முக்கியமான அறிவுரைகளை உத்தரவாக பிறப்பித்தனர்.
அதன்படி, டெல்லி முழுவதும் நாய் காப்பகங்கள் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இது குறித்து 8 வாரங்களுக்குள் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பாக நாய் காப்பகங்களுக்கு உரிய பணியாளர்களை நியமனம் செய்வதோடு, அங்கிருந்து நாய்கள் தப்பாமல் இருக்கிறது என்பதை உறுதி செய்ய சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டனர். நாய்க்கடி மற்றும் வெறிநாய் தொல்லை குறித்து புகார் அளிக்கக் கூடிய வகையில் தொலைபேசி உதவி எண் ஒன்றை ஒரு வாரத்தில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், மேலும் உதவி எண் மூலம் பெறக்கூடிய புகார்கள் மீது 4 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் விலங்குகள் நல ஆர்வலர்களை கண்டித்த உச்சநீதிமன்றம், ரேபிசால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் கொண்டுவர விலங்குநல ஆர்வலர்களால் முடியுமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.