உச்ச நீதிமன்றம் Pt web
இந்தியா

அரசியலில் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கை.. விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!

பிராமணர்களை அரசியல்ரீதியாக பின்தங்கிய வகுப்பினராகக் கருதி, அடித்தள உள்ளாட்சி தேர்தல்களில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியுமா என்பது குறித்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

PT WEB

பிராமணர்களை அரசியல் ரீதியாக பின்தங்கியவர்களாகக் கருத வேண்டும் என்று கோரி 'சமத்துவத்துக்கான இளைஞர்கள் அறக்கட்டளை (Youth for Equality Foundation) என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. சமூக மற்றும் கல்விரீதியாக முன்னேறிய வகுப்பினராக இருந்தாலும் பிராமணர்களுக்கு, கிராம பஞ்சாயத்துகள் போன்ற அடித்தள ஜனநாயக அமைப்புகளில் மிகக் குறைவான பிரதிநித்துவமே உள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.

Reservation

அப்போது, 2010ஆம் ஆண்டு கே.கிருஷ்ணமூர்த்தி எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு, "சமூக மற்றும் கல்விரீதியான பின்தங்கிய நிலை என்பது அரசியல் பின்தங்கிய நிலையோடு பிணைந்திருக்க வேண்டிய அவசியமில்லை" என்று தீர்ப்பளித்ததை அவர் சுட்டிக்காட்டினார். அரசமைப்பு அமர்வின் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும், சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினரைத் தவிர்த்து, 'அரசியல்ரீதியாக பின்தங்கிய வகுப்பினரை’ தனித்து அடையாளம் காண எந்தவொரு மாநில அரசும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் வாதிட்டார்.

முன்னதாக, இந்திய சமூகத்தில் பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே சமூகம் மற்றும் கல்விரீதியாக பின்தங்கியவர்களாக வரையறுக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தான், தலைமை நீதிபதி சூரிய காந்த் தலைமையிலான அமர்வு இந்த விவகாரத்தை ஆய்வு செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறது. இருப்பினும், முதற்கட்டமாக, அரசியல் பின்தங்கிய நிலை என்பது சமூக மற்றும் கல்வி ரீதியான பின்தங்கிய நிலையிலிருந்தே உருவாகிறது என்றும், சமூக ரீதியாக பின்தங்கியவர்களுக்கு அரசியல் இடஒதுக்கீடு வழங்குவதே நியாயமானது என்றும் கூறியிருக்கிறது.

அதேசமயம், சமூக மற்றும் கல்விரீதியாக முற்பட்ட வகுப்பினருக்கு அரசியல் பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராயப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.