இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர்.. எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்த மத்திய அரசு!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் இன்று உரையாற்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அரசின் கொள்கைகள் குறித்து விவரிப்பார் என தெரிகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன்பிறகு குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடத்தப்படும்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் இன்று தொடங்குகிறது. இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத் தொடர் நடத்தப்படும் நிலையில் முதற்கட்ட கூட்டத் தொடர் இன்றுமுதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்டத்தொடர் மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரையும் நடத்தப்படுகிறது. நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் இன்று உரையாற்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அரசின் கொள்கைகள் குறித்து விவரிப்பார் என தெரிகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 9வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதன்பிறகு குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடத்தப்படும். கூட்டத்தொடரில், வி.பி ஜி ராம் ஜி சட்டம், எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிரண் ரிஜுஜு, ஜெ.பி.நட்டா, ஜெய்ராம் ரமேஷ், டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கமல்ஹாசன், தம்பிதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பட்ஜெட் கூட்டத் தொடரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்துக்கு பதில் அமலாகி உள்ள விக்சித் பாரத் ஜி ராம் ஜி சட்டம், தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல், சிறப்பு தீவிர திருத்தம், டெல்லி காற்று மாசு, அமெரிக்க வரி விதிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வலியுறுத்தின. இவற்றை மத்திய அரசு நிராகரித்தது. கூட்டத்திற்குப் பிறகு பேசிய கிரண் ரிஜுஜு, “புதிய வேலை உறுதி திட்டம், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டு விட்டது. எனவே இந்த விவகாரத்தை மீண்டும் விவாதிக்க முடியாது” என்றார்.

