சோனம் வாங்சுக் pt web
இந்தியா

லே வன்முறை | சிறையில் இருந்துகொண்டு சோனம் வாங்சுக் சொன்ன செய்தி என்ன?

லே வன்முறை விவகாரம் - ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே. அங்மோவின் ஆட்கொணர்வு மனுவை நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.

Angeshwar G

லே வன்முறை விவகாரம் தொடர்பாக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே. அங்மோவின் ஆட்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு  இந்த வழக்கை விசாரிக்க உள்ளதாக மனுதாரர் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

சோனம் வாங்சுக்

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் அரசமைப்பு சட்டத்தின் 6வது அட்டவணையின் கீழ் லடாக்கை சேர்க்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி லே நகரில் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் ஈடுபட்டு வந்தார். அப்போது ஏற்பட்ட வன்முறையில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 4 பேர் உயிரிழந்து 90 பேர் காயமடைந்தனர். பதற்றமான சூழல் ஏற்பட்டபோது தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு சோனம் வாங்சுக் ஆம்புலன்ஸில் அங்கிருந்து வெளியேறினார். வாங்சுக் பேச்சுக்களால் தூண்டப்பட்டவர்களே வன்முறையில் ஈடுபட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியது. இதனையடுத்து வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் லடாக்கில் நடந்த வன்முறை மோதல்களைத் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு, ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தனது கணவரை விடுவிக்கக் கோரியுள்ளார். மேலும், விசாரணை இல்லாமல் 12 மாதங்கள் வரை காவலில் வைக்கும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வாங்சுக் மீது வழக்குப்பதிவு செய்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவரை தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருக்கும் அவர், வாங்சுக்கை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும், அவரை உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்த லடாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டுமென்றும் தெரிவித்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றம் ஒருவார விடுமுறைக்கு பிறகு மீண்டும் நாளை திறக்கவுள்ள நிலையில் கீதாஞ்சலி ஆங்மோவின் ஆட்கொணர்வு  மனு விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.

இத்தகைய சூழலில் வாங்சுக் ஜோத்பூர் மத்திய சிறையில் இருந்து ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறார். அதாவது, "அமைதியையும் ஒற்றுமையையும் காத்து, உண்மையான காந்திய அகிம்சை வழியில் அமைதியான முறையில் நமது போராட்டத்தைத் தொடர வேண்டும்” என மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள அவர், சுதந்திரமான நீதி விசாரணை வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருக்கிறார். “நான்கு மக்களின் கொலையில் சுதந்திரமான நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும், அது நடைபெறும்வரை நான் ஜெயிலில் இருக்கத் தயாராக உள்ளேன்” என்றும் தெரிவித்திருக்கிறார். வாங்சுக்கின் மூத்த சகோதரரான ட்சேடன் டோர்ஜி லே மற்றும் அவரது வழக்கறிஞர் மூலம் வாங்சுக் இந்த செய்தியை மக்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.