“தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்!” – மு.க.ஸ்டாலின்
“தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும் - வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்! தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதியேற்போம்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
மறைமலைநகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு இயக்கத் தலைவர் கி வீரமணி தலைமையில் நடைபெற்றது. காலையில் திமுக எம்பி ஆ.ராசா கலந்துகொண்டு நிகழ்வை துவக்கி வைத்தார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மக்களவை திமுக குழு துணை தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டவர் கலந்து கொண்டு உரையாற்றினர். பின் மாலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அதில், கொள்கையற்ற அதிமுகவால் 10 ஆண்டுகள் சீரழிந்த தமிழ்நாட்டை மக்கள் ஆதரவுடன் மீட்டெடுத்து வளர்ச்சி பணியாற்றி வருகிறோம் என்றும் திராவிடம் என்றால் என்னவென்று அதிமுக பழனிசாமிக்கு தெரியாது என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், “சிலர் திமுகவைப் பிடிக்காது எனச் சொல்லுவார்கள். அதற்குப் பொருள் ஒடுக்கப்பட்ட வீட்டுக் குழந்தைகள் படிப்பது பிடிக்காது. இந்த இனத்தில் இருந்து படித்து முன்னேறி ஐஏஎஸ், ஐபிஎஸ் என ஆவது பிடிக்காது. இடஒதுக்கீடு பிடிக்காது, சமூக நீதி பிடிக்காது, சமத்துவம் பிடிக்காது, சரிசமமாக உட்காருவது பிடிக்காது. எல்லோரும் கோவிலுக்குள் நுழைவது பிடிக்காது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது பிடிக்காது. தமிழ் பிடிக்காது, தமிழர்கள் பிடிக்காது. தலைநிமிர்ந்து நடப்பது பிடிக்காது.
சுயமரியாதை இயக்கம் தேடித்தந்த பேரை பறிப்பதற்கான சூழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அறிவியலை பின்னுக்குத்தள்ளி, பிற்போக்குத்தனங்களையும் ஆதிக்கத்தையும் மீண்டும் நிலைநிறுத்த சூழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை மட்டுமல்ல.. இந்தியாவையும் ஒரு நூற்றாண்டுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்ல நுணுக்கமாகவும் தீவிரமாகவும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்துகிற அரண்தான் திராவிடமாடல்.
வரப்போவது அரசியல் தேர்தல் கிடையாது. தமிழினம் தன்னைக் காத்துக்கொள்ளப்போவதற்கான சமுதாயத் தேர்தல். தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிவு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதில், “தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும் - வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்!தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதியேற்போம்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.