subhanshu shukla pt web
இந்தியா

#634... விண்வெளிக்குள் இந்தியக் காலடி: சுபான்ஷூ சுக்லாவின் மைல்கல் பயணம்!!

இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்திருக்கிறார்.

அங்கேஷ்வர்

ஆக்சியம் 4 திட்டத்தின் கீழ் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் ஃபால்கன் 9 விண்கலம் மூலம் புதன்கிழமை பிற்பகல் புறப்பட்டனர். சுபான்ஷூ சுக்லா இத்திட்டத்திற்கு மிஷன் பைலட்டாக செயல்பட்டார். சுமார் 28 மணி நேர பயணத்திற்கு பின் அவர்கள் சென்ற விண்கலம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி 58 நிமிடத்திற்கு சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. இதனைத் தொடர்ந்து, டிராகன் விண்கலனில் இருந்த சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்தனர். அப்போது அங்கு ஏற்கெனவே ஆய்வில் ஈடுபட்டுள்ள சக விண்வெளி வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன் விண்வெளி வீரர்களுக்கான பேட்ச்களை வழங்கினார். சுக்லா ISSன் 634 ஆவது விண்வெளி வீரரானார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரண்டு வாரங்களுக்குத் தங்கியிருக்கப்போகும் சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும், பயிர் வளர்ப்பு, மனித உடல் தசைகளில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட 60 விதமான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். இதில் சுபான்ஷூ சுக்லா 7 விதமான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளார். பூமியிலிருந்து 418 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுழற்சி முறையில் பல்வேறு நாட்டு வீரர்கள் ஆய்வுகளை செய்து வருகின்றனர்.

தலைமைப் பொறுப்பில் இருப்பது சிறப்பு

இந்த விண்வெளிப்பயணம் இந்தியாவுக்கு மட்டுமல்ல. போலந்து நாட்டிலிருந்து சென்ற ஸ்லாவோஜ் உஸ்னான்ஸ்கி 1978 ஆம் ஆண்டுக்குப் பின் விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது போலந்து விண்வெளி வீரராக மாறியிருக்கிறார். சுமார் 45 வருட இடைவெளிக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது ஹங்கேரிய வீரராக மாறியிருக்கிறார் திபோர் கபு..

விண்வெளி நிலையத்தில் மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன் பேசுகையில், “புதிதாகப் பயணிக்கும் வீரர்களின் பயணத்தில் தலைமை பொறுப்பில் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவர்கள் அந்த அனுபவத்தை முதன்முறையாக எதிர்கொள்வதை பார்க்கும்போது, நீங்களும் உங்கள் முதல் அனுபவங்களை நினைவு கூர முடியும். அதே நேரத்தில், அவர்களின் வழியாக அந்த பயணத்தை மீண்டும் ஒருமுறை அனுபவிப்பது என்பதும் மிகவும் தனித்துவமானது” எனத் தெரிவித்தார்.

விண்வெளி வாழ்வை தீர்மானிக்கும் நிலை

சுபான்ஷூ சுக்லா கூறுகையில், “இது ஒரு அற்புதமான பயணம்! உண்மையில் சிறப்பான அனுபவம். விண்வெளிக்கு வருவதை நான் ஆவலுடன் எதிர்நோக்கினேன். ஆனால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) நுழைந்த அதே நிமிடத்தில்... இங்கே ஏற்கனவே இருந்த குழு (Expedition-73) என்னை அன்புடன் வரவேற்றது. அது அவர்களது சொந்த வீட்டின் கதவைத் திறந்தது போல இருந்தது. அது ஒரு அதிசயமான தருணம். இப்போது நான் இன்னும் சிறப்பாக உணர்கிறேன்” எனத் தெரிவித்தார்.

மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த பயணம் தொடர்பாகப் பேசுகையில், “விண்வெளி ஆய்வில் இந்தியாவின் பங்கு இப்போது வெறும் ஏவுதள வரம்புக்குள் மட்டுப்படுவதில்லை. இப்போது நாம், விண்வெளி வாழ்வும், அறிவியலும் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.