ஆக்சியம்-4 திட்டத்தின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த சுபன்ஷு சுக்லா, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன் ஆகிய 4 விண்வெளி வீரர்கள், நீண்ட தடைகளுக்குப் பின், இறுதியாக கடந்த ஜூன் மாதம் 25-ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டுச்சென்றனர். இந்த விண்வெளிப் பயணத்தின் மூலம், குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா விண்வெளிக்குச் செல்லும் இந்தியாவின் இரண்டாவது விண்வெளி வீரர் என்ற பெருமை பெற்றார்.
15 நாட்கள் நீடிக்கும் இந்தப் பயணத்தில், ஆக்ஸியம்-4 மிஷனின் நான்கு பேர் கொண்ட குழுவினர் 60 அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ள இருக்கின்றனர்.
இதற்கிடையே, சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று இந்தியாவை பெருமைப்படுத்திய சுபன்ஷு சுக்லா உடன் பிரதமர் மோடி உரையாடல் நிகழ்த்தினார். கேப்டன் சுபன்ஷு சுக்லாவுடன் செய்த உரையாடல் குறித்து பேசிய பிரதமர் மோடி, குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவுடன் அற்புதமான உரையாடல் நிகழ்த்தினேன். சர்வதேச விண்வெளி ஆய்வு மைய அனுபவங்களை சுபன்ஷு சுக்லா பகிர்ந்து கொண்டதாக கூறினார்.
இந்த நிலையில், விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ள இந்திய வீரர் சுபன்ஷு சுக்லா அங்கு பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். சமீபத்தில், மனித செரிமான அமைப்பு விண்வெளியின் தனித்துவமான சூழலுக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதை விளக்கும் இளம் இந்திய மாணவர்களை இலக்காகக் கொண்ட ஒரு கல்வி வீடியோவை சுக்லா படமாக்கினார்.
இந்தக் கல்வி முயற்சியுடன், சுக்லா ISSஇல் உள்ள கிபோ ஆய்வகத்தின் லைஃப் சயின்சஸ் கையுறைப் பெட்டிக்குள் முக்கியமான தசை ஆரோக்கிய ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார். நுண் ஈர்ப்பு விசை எவ்வாறு தசைச் சிதைவை ஏற்படுத்துகிறது மற்றும் இந்த இழப்பை எவ்வாறு தடுக்கலாம் அல்லது குறைக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள தசை ஸ்டெம் செல் வளர்ப்புகளில் அவரது பணி கவனம் செலுத்துகிறது .
அதில் மிகக்குறைவான புவிஈர்ப்பு விசை உள்ள சூழலில் தசை செயல்பாடுகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். இதில் கிடைக்கும் தரவுகள் மூலம் எதிர்காலத்தில் விண்வெளியில் நீண்ட காலம் தங்கியிருப்பவர்களுக்கு ஏற்படும் தசை பாதிப்புகளை தடுக்கும் சிகிச்சையை உருவாக்க முடியும்.
தனது அறிவியல் பணிகள் மற்றும் தொடர்புகள் மூலம், சுபன்ஷு சுக்லா மனித விண்வெளிப் பயண அறிவை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறை இந்திய மாணவர்களை விண்வெளி அறிவியல் மற்றும் உயிரியலில் ஈடுபட ஊக்குவிக்கிறார். சுக்லாவுடன் சென்றுள்ள மற்ற வீரர்கள் விண்வெளியில் மனநலன் மாறுபாடு குறித்த சோதனைகளை மேற்கொண்டனர்.