விண்வெளி மையத்தில் 14 நாட்கள்.. 60 பரிசோதனைகள்; இந்தியாவை பெருமைபடுத்தும் சுபன்ஷு சுக்லா! யார் இவர்?
செய்தியாளர் - பால வெற்றி வேல் நவநீதகிருஷ்ணன்
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சுபன்ஷு சுக்லா, 2006ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்து குரூப் கேப்டனாக பணியாற்றியவர். மிக், சுகோய் உள்ளிட்ட போர் விமானங்களை 2,000 மணி நேரம் இயக்கிய அனுபவம் பெற்றவர் என்பதால், 2019ல் இந்திய மனித விண்வெளிப் பயணத் திட்டத்தில் தேர்வானார். ரஷ்யாவில் உள்ள யூரி ககாரின் காஸ்மோனாட் பயிற்சி மையத்தில் ஓராண்டு காலம் அடிப்படை பயிற்சி பெற்றார். பின்னர் இந்தியாவில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் கனவு திட்டமான ககன்யான் திட்டத்துக்கு தேர்வானார்.
இதற்கு முன்னோட்டமாக நாசா, இஸ்ரோ உள்ளிட்ட நான்கு விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளும் ஆய்வு திட்டமான ஆக்சியம்-4 திட்டத்தில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்வதற்காக தேர்வு செய்யப்பட்டார்.
விண்வெளியில் என்னென்ன பணிகளை மேற்கொள்வார்?
நாளை புறப்படும் இவர் விண்வெளிக்கு சென்ற பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை (DBT) இணைந்து நாசாவின் ஆதரவுடன் உருவாக்கிய ஏழு சோதனைகளை சுக்லா மேற்கொள்வார். நீண்ட கால விண்வெளிப் பயணங்களுக்கு அவசியமான உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆய்வுகளில் அவர் கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது.
சுக்லா உள்ளிட்ட நான்கு விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 14 நாட்கள் செலவிடுவார்கள் என தெரிகிறது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சுமார் 60 அறிவியல் பரிசோதனைகள் மற்றும் 31 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெளிநடவடிக்கைகளில் நால்வரும் ஈடுபடுவர். சுக்லா பூமிக்கு திரும்பியதும் அவரின் பயண அனுபவங்கள் மற்றும் பரிந்துரைகளை ஏற்று அதன்படி ககன்யான் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1984ஆம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த ராகேஷ் சர்மா சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற நிலையில், அதன்பிறகு அங்கு செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார் சுக்லா.