விண்வெளி மையம் சென்ற சுபன்ஷு சுக்லாவுடன் உரையாடல் நிகழ்த்திய பிரதமர் மோடி!
ஆக்சியம்-4 திட்டத்தின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த சுபன்ஷு சுக்லா, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன் ஆகிய 4 விண்வெளி வீரர்கள், கடந்த ஜூன் 25-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டுச்சென்றனர்.
இந்த விண்வெளிப் பயணத்தின் மூலம், குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா விண்வெளிக்குச் செல்லும் இந்தியாவின் இரண்டாவது விண்வெளி வீரர் என்ற பெருமை பெற்றார்.
15 நாட்கள் நீடிக்கும் இந்தப் பயணத்தில், ஆக்ஸியம்-4 மிஷனின் நான்கு பேர் கொண்ட குழுவினர் 60 அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ள இருக்கின்றனர். அவற்றில் ஏழு இந்திய ஆராய்ச்சியாளர்களால் முன்மொழியப்பட்டுள்ளன.
இந்நிலையில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று இந்தியாவை பெருமை படுத்திய சுபன்ஷு சுக்லா உடன் பிரதமர் மோடி உரையாடல் நிகழ்த்தினார்.
கேப்டன் சுக்லாவுடன் பேசிய பிரதமர் மோடி..
கேப்டன் சுபன்ஷு சுக்லாவுடன் செய்த உரையாடல் குறித்து பேசிய பிரதமர் மோடி, குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன் அற்புதமான உரையாடல் நிகழ்த்தினேன். சர்வதேச விண்வெளி ஆய்வு மைய அனுபவங்களை சுபான்ஷு சுக்லா பகிர்ந்து கொண்டதாக கூறினார்.
அவருடன் உணர்வுகளை பகிர்ந்துகொண்ட மோடி, “தாய்மண்ணை விட்டு தூரம் இருந்தாலும், இந்தியர்களின் இதயத்துக்கு நெருக்கமாக உள்ளீர்கள். நாம் இருவரும் தற்போது பேசுகிறோம் ஆனால், 140 கோடி இந்தியர்களின் உணர்வு என்னுடன் இருக்கிறது. எனது குரலில் இருக்கும் உற்சாகம், அனைத்து இந்தியர்களையும் பிரதிபலிக்கிறது.
நமது தேசியக் கொடியை விண்வெளி கொண்டு சென்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். அங்கு அனைத்தும் சரியாக உள்ளதா? நீங்கள் நலமா?” என்று நெகிழ்ச்சியுடன் உணர்வுகளை பகிர்ந்து கொண்டு பேசினார்.