2025ஆம் ஆண்டின் ஹுருன் அமைப்பின் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
2025ஆம் ஆண்டின் ஹுருன் அமைப்பின் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். எம்3எம் ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் 9.55 லட்சம் கோடி ரூபாய் நிகரமதிப்புடன் இந்தியாவின் முதல் பணக்கார குடும்பமாகத் திகழ்கின்றனர். அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மற்றும்அவரது குடும்பத்தினர் 8.15 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் 2ஆவது இடத்தில் உள்ளனர். இதற்கிடையில், HCL டெக்னாலஜிஸின் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, ரூ.2.84 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதல்முறையாக முதல் 3 இடங்களுக்குள் நுழைந்ததன் மூலம் இந்தியாவின் பணக்காரப் பெண்மணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் முதன்முறையாக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
அவர், 12,490 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
அவருக்கு அடுத்ததாக ஜூஹி சாவ்லா மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 7,790 கோடியாக உள்ளது. மூன்றாவது இடத்தில் இருக்கும் ஹிருத்திக் ரோஷன் சொத்து மதிப்பு 2,160 கோடி ரூபாயாக இருக்கிறது. பாலிவுட் பிரபலங்களின் பணக்காரர்கள் பட்டியலில் 1,880 கோடி ரூபாய் சொத்துடன் கரண் ஜோஹார் 4 ஆம் இடமும், 1,630 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் அமிதாப் 5ஆவது இடமும் வகிக்கின்றனர். மேலும், பெர்ப்ளெக்ஸிட்டியின் நிறுவனரான முப்பத்தொரு வயது அரவிந்த் ஸ்ரீனிவாஸ், ரூ.21,900 கோடி நிகர மதிப்புடன் இந்தியாவின் இளைய பில்லியனர் ஆனார்.
13 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, நாட்டில் மொத்த பில்லியனர்களின் எண்ணிக்கை 350ஐத் தாண்டியுள்ளது. இது ஆறு மடங்கு அதிகரிப்பு ஆகும். குறிப்பாக, அனைத்துப் பட்டியல்தாரர்களின் ஒருங்கிணைந்த சொத்து மதிப்பு ரூ.167 லட்சம் கோடியாக உள்ளது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதிக்கு சமம். 451 பணக்காரர்களைக் கொண்ட மும்பை, அதிக பில்லியனர்களைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து புது டெல்லி 223 மற்றும் பெங்களூரு 116 உடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.