அடேங்கப்பா.. ரூ.28 லட்சம் கோடி! பலநாடுகளின் உற்பத்தியை தாண்டும் ’முகேஷ் அம்பானி’ சொத்து மதிப்பு!
இந்தியாவின் மதிப்பு மிக்க நிறுவனங்களில் ஒன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். கச்சா எண்ணெய் முதல் சில்லறை வர்த்தகம் வரை பரந்து விரிந்து இருக்கிறது இக்குழுமத்தின் வர்த்தகம்.
இந்நிலையில், முகேஷ் அம்பானியின் குடும்ப சொத்துமதிப்பு 28 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் என பார்க்லேஸ் மற்றும் ஹரூன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
28 லட்சம் கோடி சொத்துமதிப்பு..
வெளியாகியிருக்கும் அறிக்கையின் படி, கௌதம் அதானி குடும்பத்தின் 14 லட்சத்து ஆயிரம் கோடி சொத்து மதிப்பைவிட 2 மடங்கு அதிகமாகும். இந்தியாவின் முதல் 300 பணக்கார குடும்பங்களின் சொத்து மதிப்பு 140 லட்சம் கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்துக்கும் அதிகமாகும். இதில், அம்பானி குடும்பத்தின் சொத்து மட்டும் இந்தியாவின் ஜிடிபியில் 12 சதவீதம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் மட்டும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, இந்தியாவின் மதிப்புமிக்க குடும்ப நிறுவனங்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி குடும்பம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
இந்திய ரூபாய் மதிப்பில் 28 லட்சம் கோடி என்பது சுமார் 337 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமமாகும்.
இந்நிலையில், போர்ச்சுகல், ஃபின்லாந்து, பெரு, கசகஸ்தான், கிரீஸ், ஈராக், நியூசிலாந்து, ஹங்கேரி, உக்ரைன், கத்தார், குவைத் போன்ற நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பும் தலா 337 பில்லியன் டாலர்களுக்கு குறைவாகவே உள்ளது. உதாரணத்திற்கு, ஈராக்கின் மக்கள்தொகை 4 கோடியே 64 லட்சமாக உள்ளது. இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சுமார் 258 பில்லியன் டாலர்களாக கணிக்கப்பட்டுள்ளது. இவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு இணையாக முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பு உள்ளது.