உச்சநீதிமன்றம் கேள்வி முகநூல்
இந்தியா

ஏன் உங்கள் வீட்டிலேயே தெருநாய்களுக்கு உணவளிக்கக் கூடாது? - உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

நொய்டாவில் தெருநாய்களுக்கு உணவளிப்பது தொடர்பாக ஏற்படும் தொல்லைகள் குறித்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "ஏன் உங்கள் வீட்டிலேயே தெருநாய்களுக்கு உணவளிக்கக் கூடாது?" என்று மனுதாரரிடம் கேள்வி எழுப்பியது.

ஜெனிட்டா ரோஸ்லின்

நொய்டாவில், விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு விதியால் தன்னால் தெருநாய்களுக்கு உணவளிக்க முடியாதவாறு , தொல்லைகளுக்கு ஆளாவதாக ஒரு நபர் மனுதாக்கல் செய்திருக்கிறார். இந்நிலையில், அந்த நபரை நோக்கி உச்சநீதிமன்றம் சரமாறி கேள்விகளை எழுப்பியுள்ளது.

சமீபகாலமாக தெருநாய்கள் மக்களைத் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வீட்டு நாய்களாலும் தெரு நாய்களாளும் பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி விட்டது. இது சமூக ஆர்வலர்களுக்கு பெருத்த கவலையை அளிக்கிறது. ஆபத்தை விளைவிக்கும் வகையில், நாய்களை பொது இடங்களில் திரிய விட்டால், உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் தெருவில் நடமாட முடியாத அளவுக்கு தெருநாய்களின் அச்சுறுத்தல் தீவிரமடைந்து இருக்கிறது. காலை, மாலை என எல்லா நேரத்திலும் நடப்பவர்கள், வாகனத்தில் செல்பவர்கள் என பாரபட்சம் பார்க்காமல் துரத்துவதும் அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி கடிப்பதுமே பெரும்பாலான தெருநாய்களின் வேலையாகவே உள்ளது.

இந்த சூழலில் தன்னால் தெருநாய்களுக்கு உணவளிக்க முடியவில்லை என்று நொய்டா நபர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார். மார்ச் 2024 இல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் தெருநாய்கள் தொடர்பான மனு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு கோபமடைந்தனர்.

தெருநாய்களால் பாதசாரிகளுக்கும் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்ற அமர்வு, “விலங்குகள் எல்லா இடத்திலும் உள்ளன. மனிதர்களுக்குத்தான் இடமில்லை. நீங்கள் ஏன் உங்கள் வீட்டிலேயே உணவளிக்கக் கூடாது? யாரும் உங்களைத் தடுக்கப்போவதில்லை. காலையில் சைக்கிளில் சென்றிருக்கிறீர்களா... ஒரு முறை சென்று பாருங்கள் அப்போது தெரியும். காலையில் நடைப்பயிற்சி செய்பவர்களும் ஆபத்தில் உள்ளனர். சைக்கிள் ஓட்டுபவர்களும், இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களும் அதிக ஆபத்தில் உள்ளனர்.” என்று மனுதாரரை நோக்கி சரமாறி கேள்விகளை எழுப்பியுள்ளனர்.