ம.பி.யில் பறந்த காவிக்கொடி
ம.பி.யில் பறந்த காவிக்கொடி ட்விட்டர்
இந்தியா

“அவர்கள் கேட்கல” - ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்துடன் தேவாலயத்தில் காவிக்கொடி ஏற்றிய கும்பல்! போதகர் வேதனை!

Prakash J

உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோயிலில் இன்று (ஜன.22), பிராண பிரதிஷ்டை சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அயோத்தி ராமர் கோயில்

இந்த நிலையில், தேவாலயம் ஒன்றில் காவிக் கொடி கட்டிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டம் ராணாபூரில் அமைந்துள்ள தப்தலை கிராமத்தில் தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. அப்போது, இந்த தேவாலயத்தின் மீது ஏறிய சில நபர்கள், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்துடன், அங்கிருந்த கிறிஸ்தவ சிலுவை மீது காவிக் கொடியைக் கட்டினர். அந்தக் கொடியில் அயோத்தி கோயிலும், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகமும் உள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (ஜன.21) நடைபெற்றுள்ளது.

இதையும் படிக்க: ராமர் கோயில் பிரதிஷ்டை: கர்நாடக பாஜக எம்.பியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.. வைரல் வீடியோ!

இதுகுறித்து தேவாலய போதகர் நர்பு அமலியார், “நேற்று மாலை 3 மணியளவில், நாங்கள் ஞாயிறு தொழுகையை முடித்துக் கொண்டிருந்தோம். அப்போது எங்கிருந்தோ வந்த சிலர், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்துடன் உள்ளே நுழைந்தனர். அந்தக் குழுவில் குறைந்தது 25 பேர் இருந்தனர். அவர்களில் சிலர் கொடியுடன் தேவாலயத்தின் மீது ஏறினர்.

அவர்கள் அனைவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை எனக்கு நன்றாகத் தெரியும். அவர்களுடைய சில பெயர்களும் எனக்குத் தெரியும். ’இப்படி, செய்வது சரியல்ல’ என்று நான் அவர்களிடம் எடுத்துக் கூறினேன். மேலும், ’இங்கே, வழிபடுபவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்’ எனச் சொன்னேன், ஆனால் அவர்கள் எதுவும் கேட்கவில்லை. இதற்குமுன் இப்படி நடந்ததில்லை” என ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

இதுவரை இந்த சம்பவத்தில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை’ என ஜாபுவா காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அகம் ஜெயின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”தேவாலயத்தைப் பார்வையிட்டோம். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தினோம். இந்த தேவாலயம் இருப்பது நபர் ஒருவருக்குச் சொந்தமான வீடு. உண்மையில் இது தேவாலயம் அல்ல. அதை, அவர் பிரார்த்தனைக்குப் பயன்படுத்துகிறார். எனவே, இதுதொடர்பாக நாங்கள் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை. மேலும், அந்த நபர் புகார் அளிக்க விரும்பவில்லை,. மேலும் இதுதொடர்பாக வேறு எந்தப் புகாரும் பதிவும் செய்யப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: தென்கொரிய பாப் இசை சினிமா பார்த்த சிறுவர்கள்.. கடுமையான தண்டனையை வழங்கிய வடகொரியா!

இதுகுறித்து அந்தப் போதகரான அமலியர், “இது என் வீடு இல்லை. தேவாலயம். இதை, நான் 2016இல் தொடங்கினேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், 30-40 பேர் பிரார்த்தனைக்காக இங்கு வருகிறார்கள். அது ஒரு வழிபாட்டுத்தலம். எனக்கு வீடு தனியாக உள்ளது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக நான் காவல் துறையில் புகார் அளிக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டனர். இதனால் நான் புகார் அளிக்கவில்லை. இதுகுறித்து சபையோரிடம் ஆலோசனை நடத்துவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை (இன்று நடைபெற்ற) முன்னிட்டு, நாடு முழுவதும் ராமர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. இவ்விழாவை, தீபத் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டிருந்தது. இதன்காரணமாக இந்து அமைப்பினர் கடந்த ஒரு வாரமாகவே வீடுகளிலும் கோயில்களிலும் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடி வந்தனர். இந்த நிலையில்தான் இதுபோன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. இதற்கு பலதரப்பிலும் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. நடிகர் பிரகாஷ் ராஜ் “ ‘ஹே ராம்.. இது நம் நாட்டின் புது இயல்பாக இருக்கிறது” என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இந்திய விமானத்திற்கு அனுமதி மறுத்த மாலத்தீவு அதிபர்.. உயிருக்குப் போராடிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!