முகமது முய்சு
முகமது முய்சுட்விட்டர்

இந்திய விமானத்திற்கு அனுமதி மறுத்த மாலத்தீவு அதிபர்.. உயிருக்குப் போராடிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்திய விமானத்தைப் பயன்படுத்த அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சிறுவன் ஒருவன் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தையும், இந்தியர்களையும் குறிப்பிட்டு மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் விரிசல் அதிகரித்தது. மேலும், மாலத்தீவின் புதிய அதிபர் முகம்மது முய்சு, அரசுமுறை பயணமாக சீன நாட்டிற்குச் சென்றிருந்தது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி, இந்தியா - மாலத்தீவு இடையே உரசல் போக்கு தொடரும் நிலையில், சீனாவுடன் இணைப்பைப் பலப்படுத்த மாலத்தீவு அதிபர் பல்வேறு உத்திகளை முன்னெடுத்தார். அதன் அங்கமாக மாலத்தீவில் இருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெறுமாறு, அந்நாட்டு அதிபர் முய்சு காலக்கெடு விதித்துள்ளார். அதன்படி இந்திய ராணுவ வீரர்கள் மார்ச் 15க்குள் அந்நாட்டை விட்டு வெளியேறியாக வேண்டும் என அவர் அறிவித்துள்ளார்.

மோடி, மாலத்தீவு அமைச்சர்கள்
மோடி, மாலத்தீவு அமைச்சர்கள்ட்விட்டர்

இந்த நிலையில், இந்திய விமானத்தைப் பயன்படுத்த அதிபர் முகமது முய்சு அனுமதி மறுத்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவன் மாலத்தீவில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள் அளித்த செய்திகளில், இந்த தகவல் பரவியிருக்கிறது. அதன்படி, மாலத்தீவின் கபி அலிப் விலிங்இல்ஸ் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு மூளையில் கட்டி ஒன்று இருந்துள்ளது. இதற்காக அந்தச் சிறுவன் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இந்த நிலையில், அந்தச் சிறுவனுக்கு கடந்த 18ஆம் தேதி வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுவனுக்கு உடனடியாக மேல்சிகிச்சை அளிக்க தலைநகர் மாலியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: ராமர் கோயில் பிரதிஷ்டை: கர்நாடக பாஜக எம்.பியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.. வைரல் வீடியோ!

இதனால், சிறுவனை உடனடியாக அழைத்துச்செல்ல இந்தியா வழங்கிய டிரோனியர் விமானத்தைப் பயன்படுத்த அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. விமானத்தைப் பயன்படுத்த அதிபர் முகமது முய்சு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதால் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தியா வழங்கிய விமானத்தைப் பயன்படுத்த அதிபர் ஒப்புதல் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, கிட்டத்தட்ட 16 மணிநேரத்திற்குப் பின் சிறுவன் விமானம்மூலம் மாலிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விமானத்தை பயன்படுத்த அதிபர் முகமது அனுமதி அளிக்காததால் சிறுவன் உயிரிழந்ததாக மாலத்தீவு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே சிறுவனை உடனடியாக மாலிக்குக் கொண்டுவர முடியவில்லை என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வெளியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரித்துள்ளன.

இதுகுறித்து மாலத்தீவு எம்.பி., மிகைல் நசீம், “இந்தியா மீதான அதிபரின் கோபத்துக்காக மாலத்தீவு மக்கள், தங்களின் உயிரைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

முகமது முய்சு
சீனாவுடன் கைகோர்த்த முய்சு! இந்தியா - மாலத்தீவு விரிசலின் பின்னணியில் இவ்வளவு அரசியல் இருக்கிறதா?

மாலத்தீவின் ஐக்கிய அரபு அமீரத்துக்கான முன்னாள் துணைத் தூதர் முகமது ஃபைசல், “ஒரு சில நாட்களுக்கு முன்பு, முகமது முய்சு இந்தியாவின் டோர்னியர் விமானத்தை அனுப்ப மறுத்ததால் ஒரு அட்டு குடும்பம் தங்களது மகனை இழந்தது. இன்று ஜிஏ விலிங்கிலியைச் சேர்ந்த ஒரு சிறுனின் உயிரை டோர்னியர் காப்பாற்றியிருக்க முடியும் என்ற நிலையில் உயிரிழந்துள்ளான். அதிபர் முய்சுவின் ஆணவத்துக்கு இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

டோர்னியர் என்ற விமானம், இந்தியாவால் மாலத்தீவுக்கு வழக்கப்பட்டது. இந்த விமானத்தை இந்திய வீரர்கள் இயக்கி வருகின்றனர். மாலத்தீவில் மருத்துவ மற்றும் பிற பயன்பாட்டிற்காக இந்த விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: ராமர் கோயில் நேரலைக்கு அனுமதி மறுப்பா? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com