சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கத்தகடு காணாமல்போன விவகாரத்தில், சட்டப்பேரவையில் இன்றும் 4ஆவது நாளாக அமளி நீடித்தது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் பல மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து செல்கின்றனர். இந்த நிலையில், அந்தக் கருவறையின் வாயிலில், இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசங்கள், 2019இல் கழற்றப்பட்டு, செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கவசங்களை ஒப்படைத்தபோது, அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதை செப்பனிட்டபின், சென்னை நிறுவனம் மீண்டும் ஒப்படைத்தபோது, அதன் எடை 38 கிலோவாக குறைந்திருந்தது. அதாவது தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில் இருந்து 4.54 கிலோ அளவுக்கு தங்கம் மாயமாகி இருந்தது. இந்த விவகாரம், பக்தர்கள் மற்றும் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரம், நீதிமன்றத்திற்குத் தெரிவிக்காமலேயே அகற்றப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து தொடுக்கப்பட்ட வழக்கில் வெளிச்சத்துக்கு வந்தது.
தங்கத்தின் எடை குறைந்ததில் உள்ள முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரிக்க, நீதிபதிகள் ராஜா விஜயராகவன் வி. மற்றும் கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, 2019இல் சபரிமலை கோயிலின் துவாரபாலகர் சிலைகள் மீதான தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகளை தாமிரத் தகடுகளாக தவறாகப் பதிவு செய்ததாக, அப்போதைய நிர்வாக அதிகாரி பி.முராரி பாபுவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு இடைநீக்கம் செய்துள்ளது. தங்கம் முலாம் பூசப்பட்ட சிலையை செம்பு பூசப்பட்ட சிலை என்று ஆவணத்தில் பதிவு செய்ததால், தேவசம் போர்டு முராரி பாபு மீது நடவடிக்கை எடுத்துள்ளது. ’இதுதீவிரமான நிர்வாகக் குறைபாடு' என்று வாரியம் கூறியுள்ளது. மறுபுறம், ’’சபரிமலையில் தங்கத்தகடு திருட்டுப் போனதற்கு பொறுப்பேற்று தேவஸ்வம் அமைச்சர் பதவி விலக வேணடும், தேவஸ்வம் வாரியம் கலைக்கப்படவேண்டும்’’ என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் 4ஆவது நாளாக இன்றும் அமளி நீடித்தது. முன்பு அவையில் தெரிவித்த சில கருத்துகளுக்காக முதலமைச்சர் பினராயி விஜயன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதுதொடர்பாக நேற்று விளக்கம் அளித்திருந்த முதல்வர் பினராயி விஜயன், ”சபரிமலையில் தங்கத்தகடு காணாமல்போன விவகாரத்தில் குற்றவாளியை தப்ப விடமாட்டோம். உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வருகிறது” தெரிவித்தார்.