சபரிமலை ஐயப்பன் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற 'படி பூஜை'
செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
பிரசித்தி பெற்ற சபரிமலையில் இடவம் மற்றும் வைகாசி மாதங்களின் மாதாந்திர பூஜைக்காக கடந்த 14ம் தேதி நடை திறக்கப்பட்டு, மே 19ம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சபரிமலையின் மிக முக்கியத்துவம் வாய்ந்த 'படி பூஜை' நடந்தது. இதற்காக சபரிமலையின் 18 படிகளும் சுத்தம் செய்யப்பட்டு, பட்டு விரித்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு படியிலும் நிலை விளக்கேற்றி பூஜை நடத்தப்பட்டது. 18 தேவதைகளையும் ஒவ்வொரு படியிலும் அமர்த்தி நடத்தும் இந்த படி பூஜையில் பங்கேற்போருக்கு சகல ஐஸ்வர்யங்களும், சர்வ பாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் சபரிமலை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில் மேல் சாந்தி அருண்குமார முரளி நம்பூதிரி அடங்கிய குழுவினர் 'படி பூஜை' யை நடத்தினர்.
படி பூஜைக்காக பத்தா ஒருவருக்கு, ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 900 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்படுள்ளது. சபரிமலை பூஜைகளிலேயே அதிக கட்டணமுள்ள பூஜையாக இந்த படி பூஜை உள்ளது. படி பூஜையின் முன்பதிவு வரும் 2040ம் ஆண்டு வரை முடிந்துள்ளது.