ஹரிசிங், மோகன் பகவத், ஜவஹர்லால் நேரு pt web
இந்தியா

ஆக்கிரமிப்பு காஷ்மீர் | சுருக்கமான வரலாறு... மோகன் பகவத் சொல்வது என்ன?

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில், போராட்டக்காரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

PT WEB

எல்லையில் நடந்த என்ன..? ஏன் காஷ்மீர் இரண்டாக பிரிந்தது..? காஷ்மீர் எந்த நாட்டுக்கு சொந்தம், இந்த விவகாரத்தில் தற்போது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் என்ன சொல்லியிருக்கிறார். விரிவாக பார்க்கலாம்.

இந்தியா பாகிஸ்தான் எல்லை பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த எல்லை பிரச்சனைக்கு காஷ்மீர் முக்கிய காரணமாக இருந்துவரும் நிலையில் இரு நாடுகளும் காஷ்மீர் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி வருகிறது. மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தற்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பலர் பலியாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதென்ன பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், எல்லையில் ஏன் இவ்வளவு பதற்றம் போன்ற பல கேள்விகள் எழலாம்.. அதுகுறித்து தற்போது விரிவாகப் பார்க்கலாம்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிரான போராட்டம்

1947இல் இந்தியா - பாகிஸ்தான் சுதந்​திரம் அடைந்த பிறகு, இரு நாடுகளும் காஷ்மீர் மீதான தங்கள் கட்டுப்​பாட்டை அதிகரிக்கத் தொடங்கின. இஸ்லாமிய மக்களை காஷ்மீர் அதிகம் கொண்டிருந்​தா​லும், அதன் அரசராக இந்து மதத்தைச் சேர்ந்த ஹரி சிங் இருந்​தார். இதனால் சுதந்​திரத்​துக்குப் பிறகு இந்தியாவுடன் இணைவதா, பாகிஸ்​தானுடன் இணைவதா என்கிற குழப்பம் அரசருக்கு ஏற்பட்டது.

இதற்கிடை​யில், 1947 அக்டோபர் மாதம் காஷ்மீரைக் கைப்பற்றும் நடவடிக்கையில் பாகிஸ்தான் இறங்கியது. சில பழங்குடியின இஸ்லாமிய அமைப்புகள் பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் காஷ்மீரின் சில பகுதி​களைக் கைப்பற்றின. ஆக்கிரமிப்பைத் தடுக்க காஷ்மீரை இந்தியா​வுடன் இணைக்கும் ஒப்பந்​தத்தில் ஹரி சிங் கையெழுத்​திட்​டார். ‘காஷ்மீர் மக்களின் எதிர்​காலம் காஷ்மீரி​களால்தான் தீர்மானிக்​கப்​படும்’ என்று 1947 நவம்பர் 2-ல் அகில இந்திய வானொலியில் உரையாற்றினார் அன்றைய பிரதமர் நேரு.

ஹரிசிங், ஜவகர்லால் நேரு

1947இல் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலின்போது ஐ.நா. அவை மத்தியஸ்தம் செய்து மோதலை தடுத்தது. தற்காலிகமாக எல்லைகள் பிரிக்​கப்​பட்டன. இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே சண்டை நிறுத்தம் 1949 ஜனவரி 1ஆம் தேதி ஏற்பட்டது. அதன்படி, காஷ்மீரின் மூன்றில் இரண்டு பகுதிகள் இந்தியா கட்டுப்​பாட்டில் வந்தன. ஒரு பகுதி பாகிஸ்தான் வசம் சென்றது. பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியை இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கின்றது. இந்திய அரசின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதிகளை இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று பாகிஸ்தான் அழைக்கின்றது. பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதிகளை ஆசாத் ஜம்மு-காஷ்மீர் என்று அந்நாடு பெயரிட்டுள்ளது. அதாவது, சுதந்திர காஷ்மீர். இந்த பகுதிகள் தன்னாட்சி நிர்வாகம் கொண்டிருந்த போதும் பாகிஸ்தான் தலைநகரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே பார்க்கபடுகிறது.

எல்லைகள் பிரிக்​கப்பட்ட பிறகும் இந்தியா பாகிஸ்தான் இடையே காஷ்மீர் சார்ந்து தொடர்ந்து மோதல்​களும், பதற்றமான சூழலும் நீடித்தன. இரு நாடுகளும் காஷ்மீரின் முழுப் பகுதிக்கும் உரிமை கொண்டாடி வருகின்றன. இந்தியச் சட்டக்கூறு 370இன்படி காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்​பட்டது. இதன்படி, ஜம்மு - காஷ்மீர் சட்டப்​பேர​வையின் ஒப்பு​தலுடன் மட்டுமே காஷ்மீருக்கான சட்டங்களை நாடாளு​மன்​றத்தில் நிறைவேற்ற முடியும் என உறுதிசெய்யப்​பட்டது. ஆனால் இந்தச் சட்டம் 2019இல் நீக்கப்​பட்டது என்பது தனிக்கதை.

அரசமைப்புச் சட்டம் 370-ஐ ரத்து

எல்லைப் பிரச்னை காரணமாக இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ச்சியாக மோதல் போக்கு இருந்து வருகிறது. சில நேரங்களில் இதுபோராகவும் மாறியது. விடுதலை பெற்ற காலத்தில் முதல் போரும், 1965, 1971 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்த போர்களும், 1999-ல் கார்கில் போரும் நடந்தன. இதற்கிடையே பாகிஸ்​தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் பல இந்தியா​விலிருந்து காஷ்மீரைப் பிரிக்க தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்திய ராணுவமும் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. சமீபத்தில் கூட பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிலையில் அதற்கு சிந்தூர் ஆபரேஷன் பதிலடியாக கொடுக்கப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளிலும் தற்போது பாகிஸ்தான் மீது அதிருப்தி உருவாகியுள்ளது. தற்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த செப்டம்பர் 29 முதல் ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன. சமீபத்திய போராட்டத்தின்போது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில், 12 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், இந்த அடக்குமுறையால் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் பரவின. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்களுக்கு பாகிஸ்தான் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.

jammu kashmir

RSS தலைவர் மோகன் பகவத், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு இந்தியா என்பது இந்தியா நாடு எனும் தங்கள் வீட்டின் ஒரு பகுதி தான். அந்நியர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அப்பகுதியை மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு இந்தியாவை நேரடியாக பெயரிட்டு குறிப்பிடாமல் இந்தியா நாடு எனும் வீட்டின் ஒரு அறையாக அவர் குறிப்பிட்டு பேசியது குறிப்பிடத்தக்கது.

கடந்த 5-ஆம் தேதியன்று மத்திய பிரதேஷில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "மொத்த இந்திய நாடும் ஒரு வீடு ஆனால் யாரோ ஒருவர் தங்கள் வீட்டின் ஒரு பகுதியை மட்டும் ஆக்கிரமித்துவிட்டார்கள். பிரிக்கப்படாத இந்தியாவை நாம் மனதில் வைத்துக்கொண்டு நாளை நாம் மீண்டும் அவற்றை மீட்டெடுக்க வேண்டும்" என்று RSS தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.

மேலும், சிந்தி சமூகத்தை சேர்ந்த சில மக்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். அந்த சமூக மக்களை குறிப்பிட்டு "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர்கள் பிரிக்கப்படாத இந்தியாவுக்கு தான் சென்றார்களே தவிர பாகிஸ்தானுக்கு செல்லவில்லை என்று கூறி அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மோகன் பகவத்

முன்னதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு இந்தியாவில் வாழும் மக்கள் தற்போதைய ஆட்சியாளர்களின் நிர்வாகத்திலிருந்து சுதந்திரம் வேண்டும் என கோரிவரும் நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு இந்தியாவை எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுமின்றி இந்தியா அதனை திரும்ப பெற முயற்சிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.