”ரத்தமும் கிரிக்கெட்டும் ஒன்றாக செல்லலாமா..?” இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை போட்டி நாளை நடைபெறவிருக்கும் சூழலில், போட்டி நடைபெற கூடாது என எதிர்ப்புகள் வலுத்துவருகின்றன. சில தரப்பினர் பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்சி அணிந்த உருவபொம்மையை எரித்து எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
2025 ஆசியக்கோப்பையின் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டியாக இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதல் இருந்து வருகிறது.
இரண்டு அணிகளும் 14-ம் தேதியான நாளை துபாய் மைதானத்தில் மோதவிருக்கும் நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான போட்டி நடக்கக்கூடாது என எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
முன்னதாக, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இரண்டு நாடுகளுக்கு இடையே விரிசல் அதிகமாகியிருக்கும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆசிய கோப்பை போட்டி நடைபெற கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி நடக்கக்கூடாது என்றும், அப்படி நடப்பது தேசிய நலனுக்கு எதிரானது மட்டுமில்லாமல் தாக்குதலில் உயிர் இழந்த ஆயுதப்படை வீரர்கள் மற்றும் பொதுமக்களின் தியாகங்களை இழிவுபடுத்துவதாக அமையும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் மறுத்து போட்டி தொடரும் என்று அறிவித்தது.
ஆனால் தொடக்கம் முதலே எதிர்ப்புகளை வெளிப்படுத்திவந்த பல அரசியல் தலைவர்கள் மீண்டும் எதிர்ப்புகளை அதிகமாக்கி உள்ளனர். சில தரப்பினர் பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்ஸி அணிந்த உருவ பொம்மையை எரிக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நாளை போட்டி நடக்கவிருக்கும் நிலையில், பாய்காட் இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்ற ஹேஸ்டெக்கும் எக்ஸ் தளத்தில் வைரலாகிவருகிறது.
ரத்தமும் கிரிக்கெட்டும் எப்படி ஒன்றாக செல்லமுடியும்..
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு ஒருநாள் முன்பு மீண்டும் அரசியல் தலைவர்கள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து போட்டியை புறக்கணிக்க அழைப்பு விடுத்தனர். விமர்சனங்கள் பெரும்பாலும் காங்கிரஸ், சிவசேனா (UBT), மற்றும் ஆம் ஆத்மி கட்சி (AAP) போன்ற எதிர்க்கட்சி முகாமில் இருந்து வந்தன.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களும் தொழிலாளர்களும் தங்கள் அலுவலகத்திற்கு வெளியே பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்சி அணிந்த உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்,
முன்னாள் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் போட்டியை நேரடியாக ஒளிபரப்பும் கிளப்புகள் மற்றும் உணவகங்களைப் புறக்கணிக்குமாறு பகிரங்க வேண்டுகோள் விடுத்தார்.
"சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி பேசுகையில், "தண்ணீரும் இரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது" என்ற கருத்தை தெரிவித்தார். ஆனால் தற்போது ரத்தமும் கிரிக்கெட்டும் எப்படி ஒன்றாக செல்கின்றன, போரும் கிரிக்கெட்டும் ஒரே நேரத்தில் எப்படி இருக்க முடியும்?" என சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே எதிர்ப்பை தெரிவித்தார்.
தொடர்ந்து இணையத்தில் பாய்காட் இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்ற ஹேஸ்டெக்கும் வைரலாகிவருகிறது.