புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்தர உதவித்தொகை 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
புதுச்சேரியின் 15 ஆவது சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், நிதிநிலை அறிக்கையை அந்த மாநில முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். புதுச்சேரியில் அரசு பள்ளியில் ஆறாவது முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள், மேற்படிப்புக்குச் செல்லும்போது மூன்று ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையாக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
21 வயது முதல் 55 வயது வரையிலான, அரசின் எந்த விதமான மாதாந்திர உதவித் தொகையும் பெறாத வறுமைக்கோட்டிற்கு வசிக்கும் அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் தோறும் வழங்கப்படும் உதவித்தொகை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
30 வயதினை கடந்து திருமணமாகாத, கணவரை இழந்த, வேலையற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மகளிருக்கு மாதம்தோறும் 3000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். திருமணம் ஆகும் வரை அல்லது வேலைக்கு செல்லும் வரை இது வழங்கப்படும் என அறிவித்தார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களே செயல்படுத்தப்படவில்லை என திமுக எம்எல்ஏவும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா குற்றம் சாட்டிய நிலையில், அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருவதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மதிய உணவு திட்டத்தில் வாரம் 3 நாட்களுக்கு வழங்கப்படும் முட்டை வரும் கல்வியாண்டு முதல் அனைத்து நாட்களிலும் வழங்கப்படும். மாலை நேரங்களில் வாரத்துக்கு 2 நாட்களுக்கு வழங்கப்பட்ட சிறுதானிய சிற்றுண்டிகள், இனி அனைத்து நாட்களிலும் வழங்கப்படும் என்றும் புதுச்சேரி நிலை நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாய் அல்லது தந்தையை இழந்து, வாடும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 3000 ரூபாயும் 11ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 4000 ரூபாயும் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.