tvk leader reacat on nirmala sitharamans speech
நிர்மலா சீதாராமன், விஜய்எக்ஸ் தளம்

“இன்றும் அவர் வலிமையானவரே; பெரியார் சிந்தனை போற்றுதும்” - நிதியமைச்சருக்கு விஜய் காட்டமான பதிலடி

நிர்மலா சீதாராமனின் இந்தப் பேச்சுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Published on

நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2ஆவது அமர்வு, மார்ச் 10ஆம் தேதி தொடங்கியது. அப்போது தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், மாநிலங்களவையில் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது சர்ச்சையான நிலையில் மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது பேசுபொருளானது. ”திமுக எம்பிக்கள் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய நிலையில் அவரது பேச்சைத் திரும்பப் பெற வைத்தீர்கள். ஆனால், ’தமிழை காட்டுமிராண்டி மொழி’ எனக் கூறியவரின் புகைப்படத்தை அனைத்து அறைகளிலும் மாலை போட்டு வைத்துள்ளீர்கள்” எனக் கேள்வி எழுப்பினார். நிர்மலா சீதாராமனின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், நிர்மலா சீதாராமனின் இந்தப் பேச்சுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் அவர்களுக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே? முரண்களைக் கடந்து எங்கள் கொள்கைத் தலைவரான பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!?

குழந்தைத் திருமணத்தை எதிர்த்ததால், விதவை மறுமணத்தை ஆதரித்ததால், சாதிக் கொடுமைகளை எதிர்த்ததால் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இன்றைய நிலையுடன் பொருத்திப் பார்த்துச் சொன்னால், இன்று எல்லோரும் கேட்கும் சமூக நீதிக்கான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நூறாண்டுகளுக்கு முன்பே கேட்டவர் என இன்னும் அவரைப் போற்றுவதற்கான பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

ஒன்றிய அரசின் மீதான விமர்சனங்களை மறைப்பதற்குக்கூடப் பெரியார் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பும் அளவுக்கு வலுவானவராக இன்றும் பெரியார் இருக்கிறாரே... இது போதாதா அவரைத் தமிழ்நாடு ஏன் இன்றும் மாலை மரியாதை செய்து போற்றுகிறது என்பதற்கு?! பெரியார் போற்றுதும்! பெரியார் சிந்தனை போற்றுதும்” என அதில் தெரிவித்துள்ளார்.

tvk leader reacat on nirmala sitharamans speech
’தமிழை காட்டுமிராண்டி... மாலை போட்டு வைத்துள்ளீர்கள் ’ - நிர்மலா சீதாராமன்!

முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது பெரியார் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தனர். அதற்கு பாஜக தவிர்த்து திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் யாவும் எதிர்வினை ஆற்றின. ஆனால், கொள்கை தலைவராக பெரியாரை அறிவித்த தவெக தரப்பில் எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் மவுனம் காத்தனர். இந்த விவகாரத்தை கடந்து போகவே விரும்புவதாகவும் தலைமை அலுவலகத்தில் பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும் தவெக தரப்பில் பதில் சொல்லி மழுப்பினர். இந்நிலையில், முதன்முறையாக பெரியார் குறித்த விமர்சனத்திற்கு தவெக தலைவராக விஜய் பதிலடி கொடுத்துள்ளார். அவரது இந்த பதில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com