தேஜ் பிரதாப், லாலு பிரசாத் எக்ஸ் தளம்
இந்தியா

பீகார் | லாலு பிரசாத் மகன் கட்சியிலிருந்து நீக்கம்.. பின்னணி காரணம் என்ன?

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தன்னுடைய மகன் தேஜ் பிரதாப் யாதவை, இன்று கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்

Prakash J

பீகாரில் ராஸ்டிரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) நிறுவனரும் அதன் தலைவருமாக இருப்பவர், லாலு பிரசாத் யாதவ். இவருடைய மகன்கள் ஒருவரான தேஜ் பிரதாப் யாதவை, இன்று கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர், “தேஜ் பிரதாப் யாதவின் செயல்பாடுகள், பொது நடத்தை எங்கள் குடும்பத்தின் மதிப்புகளுக்கு ஏற்ப இல்லை. தற்போதைய சூழ்நிலையில், அவரை கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் நீக்கப்படுகிறார். இனிமேல், அவருக்கு கட்சியிலும் குடும்பத்திலும் எந்தப் பங்கும் இருக்காது. அவர் ஆறு ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

tej yadav

தேஜ் பிரதாப் யாதவ் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கு அவருடைய சமூக ஊடகப் பதிவுதான் காரணம் எனக் கூறப்படுகிறது. தேஜ் பிரதாப் யாதவ் தன் முகநூல் பக்கத்தில், பதிவிட்டிருந்த பதிவில், "நான் தேஜ் பிரதாப் யாதவ், இந்தப் படத்தில் என்னுடன் காணப்படும் பெண் அனுஷ்கா யாதவ். நாங்கள் இருவரும் கடந்த 12 வருடங்களாக ஒருவரையொருவர் அறிந்திருக்கிறோம். ஒருவரையொருவர் ஆழமாக நேசிக்கிறோம். இத்தனை வருடங்களாக நாங்கள் ஒரு உறவில் இருக்கிறோம்.

இதை உங்கள் அனைவருடனும் நீண்டகாலமாகப் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். ஆனால் சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இன்று, இந்தப் பதிவின் மூலம், நான் என் இதயத்தில் உள்ளதை. நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.

முன்னதாக தேஜ் பிரதாப் யாதவ், முன்னாள் அமைச்சர் சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யாவை 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணம் செய்த சில மாதங்களிலேயே அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தேஜ் பிரதாப் யாதவின் இந்த முகநூல் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அவருடைய திருமண முறிவுக்கு இதுதான் காரணம் என விமர்சனமும் எழுந்தது. இந்த நிலையில்தான், லாலு பிரசாத் யாதவ், தேஜ் பிரதாப்பை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.

tej yadav

சகோதரர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், “என் மூத்த சகோதரரைப் பொறுத்தவரை, அரசியல் வாழ்க்கையும் தனிப்பட்ட வாழ்க்கையும் வேறுபட்டவை. அவருக்கு தனது தனிப்பட்ட முடிவுகளை எடுக்க உரிமை உண்டு. அவர் வயதில் மூத்தவர். மேலும், அவர் முடிவுகளை எடுக்க சுதந்திரமானவர். ஆனால், இதை எங்கள் கட்சியின் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார்” என்றார்.