அடுத்த பயோபிக்: சினிமாவாகிறது லாலு பிரசாத் யாதவ் வாழ்க்கை!

அடுத்த பயோபிக்: சினிமாவாகிறது லாலு பிரசாத் யாதவ் வாழ்க்கை!

அடுத்த பயோபிக்: சினிமாவாகிறது லாலு பிரசாத் யாதவ் வாழ்க்கை!
Published on

ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாத் யாதவின் வாழ்க்கை கதை சினிமாவாகிறது.

சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் வாழ்க்கை கதைகளை சினிமா ஆக்குவதில் தயாரிப்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி வெளியான சில ’பயோபிக்’ படங்கள் வசூலை வாரி குவித்ததால் இந்த போக்கு இப்போது அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

குத்துச்சண்டை வீராங்கனை ’மேரி கோம்’ வாழ்க்கை கதை, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் கதை, தோனியின் கதை, நடிகர் சஞ்சய் தத்தின் கதையான, சஞ்சு, முன்னாள் ஹீரோயின் சாவித்ரியின் வாழ்க்கைக் கதையான ’நடிகையர் திலகம்’ஆகிய படங்கள் வசூலில் சாதனை படைத்துள்ளன. இதனால் இதுபோன்ற வாழ்க்கை கதைகளை உருவாக்கத் தயாரிப்பாளர்கள் முன் வந்துள்ளனர்.

 பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது. இதில் ஸ்ரத்தா கபூர் நடித்துவருகிறார். துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவின் வாழ்க்கைக் கதையில் ஹர்ஷவர்தன் கபூர் நடித்துவருகிறார்.

மகளிர் கிரிக்கெட் அணியின் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கையும் சினிமா ஆகிறது. இதில் டாப்ஸி நடிப்பார் என்று தெரிகிறது. மற்றொரு பேட்மின்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் வாழ்க்கை கதையை, வில்லன் நடிகர் சோனு சூட் தயாரிக்கிறார். டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் வாழ்க்கை வரலாறும் சினிமாவாகிறது.ரோனி ஸ்குருவாலாவின் ஆர்எஸ்விபி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இதை தயாரிக்கிறது.

பிரபல தெலுங்கு ஹீரோவும் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை கதை, அவர் மகன் பாலகிருஷ்ணா நடிப்பில், தெலுங்கில் வெளியானது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை கதை மம்மூட்டி நடிப்பில் வெளியானது.

இதற்கிடையே சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் வாழ்க்கை ’தாக்காரே’ என்ற பெயரில் உருவானது. நவாஸூதின் சித்திக், தாக்கரேவாக நடித்திருந்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கதை, ’தி ஆக்சிடெண்டல் பிரைமினிஸ்டர்’ என்ற பெயரில் உருவானது.

பிரதமர் மோடியின் வாழ்க்கை கதை, விவேக் ஓபராய் நடிப்பில் ’பி.எம் நரேந்திர மோடி’ என்ற பெயரில் வெளியானது. அடுத்து சமீபத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் வாழ்க்கையும் சினிமாவாகிறது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையில் மாதவன் நடித்து வருகிறார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கதையை இரண்டு பேர் படமாக்கி வருகின்றனர். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கையும் சினிமாவாகிறது. இதை தெலுங்கு தயாரிப்பாளர்கள் அனில் சுன்கரா, அபிஷேக் அகர்வால் தயாரிக்கின்றனர். 

(ஸ்மிருதி சின்ஹா)

இந்த வரிசையில் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாத் யாதவின் வாழ்க்கையும் சினிமாவாகிறது. ’லால்டென்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரபல போஜ்புரி நடிகர் யாஷ் குமார், லாலு பிரசாத் யாதவாக நடிக்கிறார். ஸ்மிருதி சின்ஹா, அவர் மனைவி ராப்ரி தேவியாக நடிக்கிறார். பீகார் மற்றும் குஜராத் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. பிப்ரவரி மாதம் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com