airtel, jio voice call prepaid plans PT
இந்தியா

மீண்டும் விலை உயரப்போகும் ரீசார்ஜ் கட்டணங்கள்!!!!

கடந்த ஆண்டு ஜூலை மாதம்தான், ரீசார்ஜ் கட்டணங்களை ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக உயர்த்தின. தற்போது, மீண்டும் விலை உயர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

karthi Kg

‘சிக்னல் இருக்கோ இல்லையோ, மாசமான ரீசார்ஜ் பண்ணுங்கங்கற மெசேஜ் மட்டும் சட்டுன்னு வந்துடுது’ என நொந்துகொள்ளாத பயனர்களே இந்தியாவில் இருக்க முடியாது. கடந்த ஆண்டு ஜூலை மாதம்தான், ரீசார்ஜ் கட்டணங்களை ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக உயர்த்தின. தற்போது, மீண்டும் விலை உயர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த ஆண்டு நவம்பர் ~ டிசம்பர் மாதங்களில் விலை ஏற்றப்படலாம் என செய்திகள் வெளியான நிலையில், தற்போது ஜூலை ~ ஆகஸ்ட் மாதங்களிலேயே விலை ஏற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கடந்த ஆண்டு ஜூலை மாதம், 10 முதல் 27 சதவிகிதம் வரை மாதாந்திர பிளான்களில் விலை ஏற்றப்பட்டன. ஏர்டெல் மாதாந்திர ப்ரீபேட் பிளேனை 179 ரூபாயிலிருந்து 199 ரூபாய்க்கு உயர்த்தியது. போஸ்ட்பேட் பிளானை 399ல் இருந்து 449 ரூபாய்க்கு உயர்த்தியது. ஏர்டெல் , ஜியோ விலையை உயர்த்தியதும், வோடஃபோன் நிறுவனம் பெயரளவுக்கான சேவையை வழங்கியது போன்ற சிக்கல்களால் அரசு நிறுவனமான BSNLக்கு ஜாக்பாட் அடித்தது. 5ஜி இல்லை என்பது மட்டும் தான் BSNLல் இருந்த குறை. அட 5ஜி எதுக்கு நெட் வந்தா பத்தாதா என 4ஜிக்கே செட்டில் ஆனார்கள் சாமான்யர்கள். பெரிய அளவில் சந்தாதாரர்கள் BSNL நிறுவனம் நோக்கி PORT நம்பருடன் நகர ஆரம்பித்தார்கள். ஆனால், இதெல்லாம் கொஞ்சம் காலம் தான்.

கடந்த மே மாத எண்ணிக்கையின் படி, BSNL கிட்டத்தட்ட 1.35 லட்ச சந்தாதாரர்களை இழந்திருக்கிறார்கள். அதே சமயம், ஏர்டெல் 2.5 லட்ச சந்தாதாரர்களை கூடுதலாகவும், ஜியோ 27 லட்ச சந்தாதாரர்களை கூடுதலாகவும் பெற்று இருக்கிறது. இரண்டு நிறுவனங்களே இனி எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சூழல் உருவாகியுள்ளதால், விரைவில் விலை ஏற்றப்படுவதற்காக எல்லா சாத்தியங்களும் இருக்கின்றன.