”எதிரணியில் இருந்தாலும் பண்ட்டின் ஆட்டத்தை ரசிப்பேன்; அவர் ஆபத்தான வீரர்” - பென் ஸ்டோக்ஸ் புகழாரம்
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 4வது இன்னிங்ஸில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது.
1-0 என முன்னிலை பெற்றிருக்கும் இங்கிலாந்து அணி, நாளை பர்மிங்காமில் தொடங்கவிருக்கும் இரண்டாவது போட்டிக்கு மாற்றமே இல்லாத அதே அணியை அறிவித்துள்ளது.
இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பென் ஸ்டோக்ஸ், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ரிஷப் பண்ட் அச்சுறுத்தும் வீரராக இருப்பார் என்று வெளிப்படையாக கூறினார்.
எதிரணியில் இருந்தாலும் பண்ட்டின் பேட்டிங்கை ரசிப்பேன்..
இரண்டாவது போட்டி குறித்து பேசியிருக்கும் பென் ஸ்டோக்ஸ், நாங்கள் மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க நினைக்கிறோம், அதேபோல் 4வது இன்னிங்ஸில் மிகப்பெரிய இலக்காக இருந்தாலும் விரட்டுவதில் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்தியாவின் தாக்குதலுக்கு தயாரகவே இருக்கிறோம் என்று பேசினார்.
முதல் டெஸ்ட் போட்டியில் 2 சதமடித்த ரிஷப் பண்ட் குறித்து பேசிய அவர், "ரிஷப் பண்ட் எனக்கு எதிரணியில் இருந்தாலும் அவரின் ஆட்டத்தை மிகவும் ரசிப்பேன். திறமையான ஒருவரை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி விளையாட விடும்போது என்ன நடக்கும் என்பதை நீங்கள் அவருடைய ஆட்டத்தின் மூலம் பார்ப்பீர்கள். அவர் எதிரணிக்கு அச்சத்தை கொடுக்கும் வீரர்” என்று புகழ்ந்து பேசினார்.
மேலும் பும்ரா இடம்பெறுவது கேள்விக்குறியாக இருப்பது குறித்து பதிலளித்த அவர், அதை சமாளிப்பது இந்தியாவின் பிரச்னை என்று தெரிவித்தார்.