சிறுவனை மீட்க நடந்த பணி எக்ஸ் தளம்
இந்தியா

ராஜஸ்தான்: 55 மணி நேரமாக போர்வெல்லில் போராடிய 5 வயது சிறுவன், பரிதாபமாக உயிரிழப்பு!

ராஜஸ்தானில் 55 மணி நேரமாக போர்வெல்லில் போராடிய 5 வயது சிறுவன், போராட்டத்திற்கு பிறகும் பலியான பரிதாபம் அரங்கேறியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

ராஜஸ்தானில் 55 மணி நேரமாக போர்வெல்லில் போராடிய 5 வயது சிறுவன், போராட்டத்திற்கு பிறகும் பலியான பரிதாபம் அரங்கேறியுள்ளது.

இரு தினங்களுக்கு முன்னர் பப்பாடா எனும் பகுதியில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுவன், திறந்து வைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். தகவலறிந்து உடனடியாக தீயணைப்புத்துறையினர் மற்றும் மாநில மீட்புக் குழுவினர் விரைந்து சென்று சிறுவனை மீட்கும் பணியை தொடங்கினர். சிறுவனை மீட்கும் பணி 3 ஆவது நாளாக இன்றும் நடைபெற்று வந்தது.

150 அடியில் சிறுவன் சிக்கியுள்ள நிலையில், சிறுவனுக்கு ஆக்ஸிஜன் கொடுத்த மீட்புக் குழுவினர், சிறுவன் செயல்பாடுகளை கேமராக்கள் கொண்டு கண்காணித்து வந்தனர்.

பக்கவாட்டில் பள்ளம் தோண்டி சிறுவனை மீட்கும் பணி நடைபெற்று வந்தது. முன்னதாக உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒரு குழந்தை குடை தொழில்நுட்பம் மூலம் மீட்கப்பட்டது. அந்த தொழில்நுட்பமும் இங்கு இம்முறை பயன்படுத்தப்பட்டது.

இந்த நிலையில்தான், சுமார் 55 மணி நேரப்போராட்டத்துக்கு பின்னர் சிறுவனை ஆள்துளை கிணற்றிலிருந்து மீட்டனர். மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பேசிய ராஜஸ்தான் அமைச்சர் கிரோடி லால் மீனா “நாடு முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆழ்துளை கிணற்றை மூடுவது தொடர்பாக அரசின் உத்தரவு உள்ளதே தவிர, அது தொடர்பாக சட்டம் இல்லை. எனவே இது தொடர்பாக சட்டம் இயற்றப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.