வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆதாரங்களுடன் ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியில் அடங்கிய, மகாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதியில் மிகப்பெரிய வாக்கு திருட்டு நடைபெற்றிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
அந்த தொகுதியில் மொத்தம் 6.5 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் நிலையில், அதில் சுமார் 1 லட்சம் போலி வாக்காளர்கள் இருக்கின்றனர். மேலும், ஒரு முகவரியில் பல பேர் என அதில் மட்டும் 10 ஆயிரத்து 452 வாக்காளர்கள் இருந்தனர் (குறிப்பாக, ஒரேவீட்டில் 80 வாக்காளர்கள் இருந்தனர்). முறையான புகைப்படம் இல்லாமல் 4 ஆயிரத்து 132 வாக்காளர்கள் இருந்தனர். Form 6 படிவத்தை சுமார் 33 ஆயிரத்து 692 வாக்காளர்கள் தவறாக பயன்படுத்தியுள்ளனர்” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஆனால் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ராகுலின் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்திருந்தது. ஆனால், இதுகுறித்து உண்மையை நிரூபிக்கும் பணியில் களமிறங்கிய இந்திய டுடே ஊடகம், பெங்களூருவில் ஒரே வீட்டு முகவரியில் 80 பேர் பதிவு செய்திருந்ததை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டியது. இன்னொருபுறம், ‘இண்டியா டிவி’க்கு பிரத்யேக நேர்காணல் அளித்த ஆதித்ய ஸ்ரீவத்ஸவா, தான் லக்னோவைச் சேர்ந்தவன் என்றும், பின்னர் மும்பைக்கும் அதன் பின் பெங்களூருவுக்கும் இடம்பெயரும் சூழல் ஏற்பட்டதாகவும், வாக்காளர் அடையாள அட்டையை வசிப்பிடங்களுக்கு ஏற்ப மாற்றி பதிவு செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டார். மேலும் பழைய பதிவுகள் நீக்கப்படாமல் இருந்திருக்கலாம் எனக்கூறிய அவர், தனது தனிப்பட்ட தகவல்களை பொதுவெளியில் வெளியிட்டதாக ராகுலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தி தன்னுடைய குற்றச்சாட்டுகளில் உறுதியாக நிற்பதும், தேர்தல் ஆணையம் அவற்றை தொடர்ந்து மறுப்பதும் ஒரு பக்கம் இருக்க, தற்போது வெளியாகியுள்ள அவரின் நேர்காணல் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
சட்டப்படியே ஒருவர் நடந்துகொண்டாலும்கூட, இவ்வளவு குறுகிய காலத்தில் அடுத்தடுத்த மாநிலங்களுக்கு ஒருவர் தன்னுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட முடியுமா?
ஒருவர் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு மாறும்போது, தன்னுடைய ஓட்டை மாற்றிக்கொள்ள எவ்வளவு கால இடைவெளி அனுமதிக்கப்படலாம்?
இந்தியாவில் மாநிலங்கள் வெறும் நிர்வாக அலகுகளாக மட்டும் அல்லாமல், தனித்த அடையாளம் கொண்டவையாக உள்ள சூழலில், மாற்று மாநிலங்களிலிருந்து வருவோருக்கு ஓட்டுரிமை அளிப்பதற்கான கால இடைவெளியை நிர்ணயிப்பது தொடர்பாக நாடு புதிய விவாதங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதா?
என்பது போன்ற விரிவான கேள்விகளையும் எழுப்பியுள்ளதுடன், அதுதொடர்பான விவாதங்களையும் எழுப்பியுள்ளது.
இன்னொரு புறம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குத் திருட்டு என்ற அணுகுண்டை ஆதாரங்களுடன் வீசிய நிலையில், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து பல மாநிலங்களின் வாக்காளர் பட்டியல்கள் காணாமல் போயுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இணையதளங்களில் இருந்து சில பக்கங்கள் நீக்கப்பட்டதாகவும், வாக்காளர் பட்டியல் நீக்கப்பட்டதாக வெளியாகும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், அனைத்து வாக்காளர் பட்டியல்களும் பொதுவில் யார் வேண்டுமானாலும் அணுகக்கூடியதாகவும் பதிவிறக்கம் செய்யக்கூடியதாகவும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இணையதளப் பக்கத்திலிருந்து வாக்காளர் பட்டியல்கள் ஒரே நாள் இரவில் நீக்கப்பட்டிருப்பதாக எஸ்க் பக்கத்தில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுப் பதிவை மேற்கோள்காட்டி, இது தவறான தகவல் என்று பதிவு செய்திருக்கிறது தேர்தல் ஆணையம்.