ராகுல்காந்தி X
இந்தியா

”50,000 போலீசாரை அழைத்து வந்தாலும், பின் வாங்க மாட்டோம்” - ராகுல்காந்தி உறுதி!!

10,000, 20,000, 50,000, என நீங்கள் விரும்பும் எண்ணிக்கையை அழைத்து வாருங்கள், ஆனால், நாங்கள் பின்வாங்கப் போவதில்லை என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Premkumar S

நீட் முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் பதவி விலகக் கோரி டெல்லியில் நடத்தப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் வெற்றி பெற்றது. தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.

இந்தச் சம்பவம் முடிவடைந்த சில மாதங்களிலேயே, SIR விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக பல்வேறு முடிவுகளை எடுத்ததாக மற்ற இரு தேர்தல் ஆணையர்கள் குற்றம் சாட்டியது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

சிஜெபி போராட்டம்

இந்தச் சூழலில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடைபெறும் என கரப்பான் ஜனதா கட்சி அறிவித்தது.

இந்தப் போராட்டத்துக்கு டெல்லி காவல்துறை தடை விதித்த நிலையில், மத்திய அரசும் போராட்டத்தைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி, நேற்று இரவில் இருந்து, இன்று காலை வரை டெல்லி வந்து சேரும் பல விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டன. மேலும், டெல்லி முழுவதும் 4000 பெண் போலீசார் உள்ளிட்ட 14,000 காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று போராட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்களான மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன் உள்ளிட்ட 5,000 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சிஜெபி நிறுவனர் அபிஜித் திப்கே டெல்லி விமான நிலையத்திலேயே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச்சூழலில் தான், 50,000 போலீசாரை அனுப்பினாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”மிஸ்டர் மோடி, நீங்கள் 10 ஆயிரம் அல்ல 50 ஆயிரம் போலீசாரைக் கூட வரவழையுங்கள்; அனைத்துத் தலைவர்களையும் கைது செய்யுங்கள். அனைத்து இளைஞர்களையும் கைது செய்யுங்கள். எங்கள் அனைவரையும் கைது செய்யுங்கள். நாங்கள் உங்களைச் சூழ்ந்துள்ளோம், நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. எங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைத்துவிட்டன, இந்த ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோம். இந்திய இளைஞர்களே, உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். தொடர்ந்து போராடுங்கள். நாங்கள் உங்களுக்குத் துணை நிற்கிறோம். இந்த ஆட்சியும், நமது அரசியலமைப்பைத் தாக்கியவர்களும் தோற்கடிக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.