rahul gandhi x page
இந்தியா

வாக்கு திருட்டு விமர்சனம் | நாடு முழுவதும் வெடித்த விவாதம்.. ராகுல் பற்ற வைத்த நெருப்புதான் என்ன?

ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் தொடர்பாக வைத்த குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலில் என்ன நடந்தது ராகுல் சொன்ன விமர்சனங்கள் என்ன ஏன் அது சிக்கல் என்பதை விரிவாக பார்க்கலாம்.

இர்ஃபாத் சமீத் / Irfath Sameeth

ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் தொடர்பாக வைத்த குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலில், உண்மையில் என்ன நடந்தது ராகுல் சொன்ன விமர்சனங்கள் என்ன? ஏன் அது சிக்கல் என்பதை விரிவாக பார்க்கலாம்.

ராகுல் காந்தி 2 நாட்களுக்கு முன் பெங்களூர் சென்ட்ரல் நாடாளுமன்ற தொகுதி, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல்களில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த தேர்தல் முறைகேடு மொத்தம் 5 வழிகளில் நடைபெற்றுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

1. போலி வாக்காளர்கள்

2. போலியான அல்லது செல்லாத புகைப்படங்கள்

3. ஒரே முகவரியில் பல வாக்காளர்கள்

4. போலியான அல்லது இல்லாத முகவரி

5. Form 6 ஐ தவறாக பயன்படுத்துவது..

இந்த 5வழிகளில் தான் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார். இதற்காக பெங்களூர் சென்ட்ரல் நாடாளுமன்ற தொகுதிக்குள் இருக்கும் மகாதேவபுரா சட்டமன்ற தொகுதியை எடுத்து ஆய்வு செய்து தரவுகளை வழங்கியுள்ளனர்.

ராகுல் காந்தி

ஏன் மகாதேவபுரா தொகுதி?

பெங்களூர் சென்ட்ரல் தொகுதியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசு பாஜகவிடம் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த நாடாளுமன்ற தொகுதிக்குள் சரவங்னா நகர், ராமன் நகர், சிவாஜி நகர், சாந்தி நகர், காந்தி நகர், ராஜாஜி நகர், சாம்ராஜபேட், மகாதேவபுரா உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன.

இதில் சரவங்னா நகர், சிவாஜி நகர், சாந்தி நகர், சாம்ராஜபேட், சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரசு வெற்றி பெற்று இருந்தது. அதேநேரம் ராமன் நகர், காந்தி நகர், ராஜாஜி நகர், மகாதேவபுரா சட்டமன்ற தொகுதிகளில் பாஜகவும் கைப்பற்றி இருந்தது.

இதில் மற்ற தொகுதிகளில் 2 கட்சிகளுக்குமான வித்தியாசம் அதிகபட்சம் 60 ஆயிரம் ஓட்டுகளுக்குள்ளேயே இருந்தது ஆனால் மகாதேவபுரா சட்டமன்ற தொகுதியில் மட்டும் பாஜக 114,046 ஓட்டுக்கள் காங்கிரஸை விட அதிகம் பெற்றது. இந்த தொகுதியில் பாஜக ஒட்டுமொத்தமாக 229632 வாக்குகளும் காங்கிரஸ் 115586 வாக்குகளையும் பெற்றது. இந்த அதிகபட்ச வேறுபாடு தான் காங்கிரசின் பார்வையை இந்த தொகுதி பக்கம் திருப்பியது.

இந்த தொகுதியில் பதிவான வாக்குகளை ஆராய்ந்த போது 11,965 வாக்குகள் போலி வாக்காளர்கள் என்றும் 40,009 வாக்காளர்களுக்கு போலியான அல்லது செல்லாத முகவரிகள் இருப்பதாகவும், 10,452 வாக்காளர்களுக்கு ஒரே குறிப்பிட்ட முகவரிகளில் அதிகப்படியான நபர்கள் பதிவு செய்து இருப்பதாகவும், 4,132 வாக்காளர்கள் செல்லாத புகைப்படங்களை பயன்படுத்தி இருப்பதாகவும் 33,692 பேர் Form 6 ஐ தவறாக பயன்படுத்தியுள்ளது என மொத்தம் 1,00,250 வாக்குகள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இப்போது ராகுல் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கான தரவுகளாக என்னென்ன கொடுத்திருக்கிறார் என்பதை பார்க்கலாம்.

rahul gandhi

போலி வாக்காளர்கள்:

குர்கீரத் சிங் டாங் என்பவர் 4 வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்களித்ததற்கான தரவுகளை ராகுல் வழங்கியுள்ளார். அதேபோல ஆதித்யா ஶ்ரீவஸ்தவா என்பவர் கர்நாடகாவில் இரண்டு முறை உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் வாக்களித்ததாகவும் விஷால் சிங் என்பவர் கர்நாடகா மற்றும் உத்திர பிரதேசத்தில் வாக்களித்ததாகவும் கூறியிருக்கிறார்.

இது வெறும் உதாரணங்கள்தான் என்றும் இதுபோல பல வாக்காளர்கள் பல்வேறு வாக்குச்சாவடிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் வாக்களித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

போலி அல்லது செல்லாத முகவரிகள்:

40 ஆயிரம் போலி முகவரிகள் என குறிப்பிட்டுள்ள பட்டியலில் பல வாக்காளர்களின் முகவரியில் 0 என்கிற எண் மட்டுமே இடம்பெற்று இருப்பதாகவும் அவர்களின் பெற்றோர் பெயர்களில் ilsdfhug, dfoigoidf என்கிற அர்த்தமே இல்லாத எழுத்துக்கள் இடம்பெற்று உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட முகவரியில் பல வாக்காளர்:

இந்த குற்றச்சாட்டுக்கு உதாரணமாக 35 ஆம் பதிவெண் கொண்ட ஒரு ஒற்றை ரூமில் 80 பேர் தங்கியிருப்பதாக 80 பேருக்கு அதே முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 153 Beire club என்கிற வணிக இடத்தை 68 பேர் தங்களது முகவரியாக வழங்கியுள்ளனர். ஆனால் அங்கு சென்று பார்த்த போது அப்படி யாருமே இருப்பதற்கான அடையாளமே இல்லையென்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வகையில் 3 பிரிவுகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது, ஒன்று முகவரியில் 0 என இருப்பது, அல்லது முகவரியை சரிபார்க்க முடியாமல் போவது அல்லது தந்தையின் இடத்தில் அர்த்தமே இல்லாத எழுத்துக்கள் இருப்பது.

Form 6 ஐ தவறாக பயன்படுத்துதல்..

இந்த பிரிவில் 33,692 மோசடிகள் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள ராகுல் அதற்கான உதாரணங்களையும் கூறியிருக்கிறார். 18 வயதுக்கு மேற்பட்ட வாக்களிக்கும் தகுதியுடைய நபர்கள் Form 6 ஐ பயன்படுத்தி வாக்களிக்க முடியும். அதன்படி ஷாகுன் ராணி என்கிற 70 வயது மூதாட்டி இரண்டுமுறை (செப்டம்பர் 13,2023 & அக்டோபர் 31 2023) புதிய வாக்காளராக தன்னை பதிவு செய்துள்ளார். இந்த மூதாட்டி 2 முறை வாக்களித்திருக்க வேண்டும் அல்லது இவரது அடையாளத்தை பயன்படுத்தி யாரோ ஒருவர் வாக்களித்திருக்க வேண்டும் என்பது ராகுலின் குற்றச்சாட்டு.

இவையெல்லாம் கர்நாடகாவின் பெங்களூர் சென்ட்ரல் தொகுதியில் உள்ள மகாதேவபுரா தொகுதியை மையப்படுத்திய குற்றச்சாட்டுகள் மட்டுமே.

இவை தவிர மகாராஷ்டிராவில் தேர்தலுக்கு முந்தைய 5 ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை விட கடைசி 5 மாதங்களில் அதிக வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், வாக்குபதிவு நாளில் பெரும்பாலான தொகுதிகளில் மாலை நேரங்களில் குறைவான மக்களே வரிசையில் காத்திருந்த நிலையில் பல தொகுதிகளில் மாலை 5 மணிக்கு மேல் அதிகப்படியான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Rahul Gandhi

குற்றச்சாட்டை மறுக்கும் பாஜக..

இருப்பினும் ராகுலின் இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் ராகுலிடம் இது தொடர்பான ஆவணங்களை தங்களிடம் ஒப்படைக்குமாறும் ராகுல் உறுதிமொழியிட்டு கையெழுத்து போட வேண்டும் என்றும் கேட்டிருக்கிறது. ஆனால் ராகுல் காந்தியோ மக்களிடம் வெளிப்படையாகவே தான் அனைத்தையும் கூறிவிட்டதாகவும் அதையே உறுதிமொழியாக எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அடுத்து என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்